புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைப் பணிகளுக்காக 700 வீரர்களை ஏற்றிய சிறப்பு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா தடுப்பு பணிகளுக்காக தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ராணுவ வீரர்களை எல்லைகளுக்கு அனுப்ப, இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்திருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்காக பெங்களூரு, செகந்திராபாத், கோபல்பூர், பெல்காம் பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த நூற்றுக்கணக்கான வீரர்களை ரயில்கள் மூலம் அனுப்ப வேண்டிய தேவை உள்ளது.
கொரோனா பரவல் உள்ள சமயத்தில் பயிற்சி மையங்களில் கூட்டத்தை தளர்த்துவதற்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது. எனவே தனிமைப்படுத்தல் முடிந்தவர்கள் அல்லது மருத்துவரீதியாக தகுதி பெற்றவர்கள் மீண்டும் பணிக்கு அனுப்பபட உள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவிலிருந்து செகந்திராபாத் வழியாக, ஜம்முவிற்கு ஏப்ரல் 17ம் தேதி ஒரு ரயிலும், பெங்களூருவிலிருந்து கோபல்பூர் ஹவுரா வழியாக கவுஹாத்திக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரு ரயிலும் சென்றது. பயிற்சி முடித்த வீரர்கள் ஏப்ரல் மாதம் 17ம் தேதி புறப்பட்டு, நேற்று ஜம்மு வந்து சேர்ந்ததாக பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
சிறப்பு ராணுவ ரயில் ஜம்மு செல்வதை முன்னிட்டு, அங்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ராணுவத்தினர் பெரிய அளவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.