புதுக்கோட்டை: நள்ளிரவில் ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழந்த சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன் குடும்பத்துக்கு முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலில் இரங்கல் தெரிவித்து ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவவ்ர் பூமிநாதன். இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் தலைஞாயிறு. இவர் குடும்பத்துடன் புதுக்கோட்டை அருகே உள்ள நவல்பட்டு சோழன்மாதேவியில் வசித்து வந்தார். இவரது மனைவி கவிதாமணி (50), மகன் குகன் (22) அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வருகிறார் .
தற்போது 55 வயதாகும் பூமிநாதன் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு பணியில் இருந்துள்ளதார். அப்போது உடன் பணியில் இருந்த தலைமை காவலர் சித்திரைவேலுவும் தனித்தனியே டூவீலரில் இரவு ரோந்து பணிக்கு சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் பூலாங்குடி காலனி பகுதியில் இரண்டு பைக்குகளில் வந்தவர்களின் ஒருவரது பைக்கில் ஆடு ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்டு அவர்களை விசாரிக்க பூமிநாதன் சென்றதும், அவர்கள் ஆட்டை விட்டுவிட்டு பைக்கில் தப்பித்தனர். அவர்களை விரட்டிச் சென்ற பூமிநாதன், உடனே தலைமை காவலருக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் அவக்ரள் இருவரும் ஆடு திருடும் கும்பலை விரட்டிச் சென்றனர். ஆடு திருடிய பகுதியான பூலாங்குடி காலனியில் இருந்து (திருவெறும்பூர்- கீரனூர் சாலையில்) 15 கிமீ தூரம் துரத்தி வந்த போது அவர்கள் பள்ளத்துப்பட்டி ஊருக்குள் சென்றனர். எஸ்எஸ்ஐ பூமிநாதனும் தொடர்ந்து விரட்டிச்சென்றார். அப்போது இருவரும் வேறு வேறு வழியாக தேடிச்சென்றனர். இநத் நிலையில், புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில், ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி இருந்ததால் ஆடு திருடர்கள் அங்கேயே நின்றுவிட்டனர். எஸ்எஸ்ஐ பூமிநாதன் அவர்களை மடக்கி நிறுத்திவிட்டு, வழி தவறி சென்ற ஏட்டு சித்திரைவேலுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். அவர் வர தாமதமானதால், நவல்பட்டு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் குளத்தூர் சேகரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.
இதனால், தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த ஆடு திருடும் கும்பல் பூமிநாதனை தங்களிடம் இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த பூமிநாதன் தரையில் சாய, ஆடு திருடும் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து யாரும் அறியாத நிலையில், அதிகாலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் சாலையில் போலீஸ்காரர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே பூமிநாதனின் நண்பர் சேகர் அங்கு வந்த போது எஸ்எஸ்ஐ கால்லப்பட்டு கிடப்பதை பார்த்து, கீரனூர் போலீசாருக்கும், உயரதிகாரிகளுக்கும்தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி பொறுப்பு வகிக்கும் திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர், புதுக்கோட்டை பொறுப்பு எஸ்பி சுஜித்குமார் மற்றும் ஏராளமான போலீசார் வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர் பின்னர் காவல்துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனை செய்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் பூமிநாதன் உடல் நேற்று மாலை வீட்டிலிருந்து ஊர்வலமாக சோமாநகர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பூமிநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க இலுப்பூர் டிஎஸ்பி அருண்மொழி, கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி, சிவகங்கை பகுதியில் ஏற்கனவே ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அதில், ஒரு சிலரின் எண்கள் நேற்றுமுன்தினம் இரவு நவல்பட்டு பகுதிகளிலுள்ள செல்போன் டவரில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தனிப்படையினர் சிவகங்கை விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் 21ம் தேதி (நேற்று) அதிகாலை நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளார். இச்சம்பவத்தின்போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரோந்து பணியிலிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.