டில்லி

துருக்கி நாட்டில் பிரதமர் மோடிக்கு சிறப்பு தபால்தலை வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி உள்ளது.

துருக்கி நாட்டில் வெளியான ஒரு தபால்தலையில் மோடியின் உருவம் மற்றும் இந்திய தேசியக்கொடி இடம் பெற்றிருந்தது. அத்துடன் கீழே நரேந்திர மோடி, இந்திய குடியரசின் பிரதமர் என எழுதப்பட்டிருந்தது. அந்த விவரம் முதலில் டிவிட்டரில் பூஜா என்பவரால் பதியப்பட்டது. அதில் அவர் ”துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளது. ஆனால் இங்கிருப்பவர்களுக்கு அவரை திட்டவே நேரம் போதவில்லை” என பதிந்திருந்தார்

.

அதே படத்தை அசாம் மாநில பாஜக பதிந்தது. அதில் “துருக்கி மதிப்புக்கிறிய பிரதமரின் தபால் தலையை வெளியிட்டுள்ளது. திரு நரேந்திர மோடி ஜி. இது நமது நாட்டுக்கும் நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவருக்கும் அளித்துள்ள மகத்தான மரியாதை” என பதியப்பட்டுள்ளது.

இதை ஒட்டி பல பாஜக ஆதரவாளர்கள் இந்த தபால் தலை புகைப்படத்தை பதிந்துள்ளனர். அனைவரும் இந்திய பிரதமர் மோடிக்கு துருக்கி நாடு சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமை செய்துள்ளதாக புகழ்ந்துள்ளனர். அத்துடன் இந்த பதிவுகளின் மூலம் மோடியை உலக அரங்கில் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் தலைவர் என ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பதிய தொடங்கினர்.

இது குறித்து ஆய்வில் இறங்கிய போது துருக்கி நாடு இந்த தபால் தலையை வெளியிட்டுள்ளது சரியான செய்தி என தெரிய வந்துள்ளது. ஆனால் அதில் ஒரு திருப்பம் என்ன என்றால், இந்த தபால் தலை மோடிக்காக வெளியிடப்பட்ட சிறப்பு தபால் தலை இல்லை என்பதாகும். தவிர இந்த தபால் தலை வெளியிடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

கடந்த 2015 ஆம் வருடம் நவம்பர் மாதம் ஜி 20 கூட்டமைப்பு நாடுகள் மாநாடு துருக்கியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். அப்போது துருக்கி நாடு மாநாட்டில் கலந்துக் கொண்ட அனைத்து நாட்டு தலைவர்களின் தபால் தலையை வெளியிட்டுள்ளது. அதில் மோடியின் தபால் தலையும் ஒன்று என தெரிய வந்துள்ளது.