சென்னை:
“நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு” வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்திற்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அவர்கள் படித்து வந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படுப்புகளில் சேர்வதற்கு வழிவகை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், கடந்த 8ந்தேதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் வழங்கியது.
தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், அதிக பாதிப்புக்குள்ளான சென்னை உள்பட 4 மாவட்டங்களில் எடுக்கப்பட நடவடிக்கை தொடர்பாக இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரங்கு, மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழுவின் அளித்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த அவசர சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.