தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் போக்ஸோ நீதிமன்றம்

Must read

சென்னை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்களை விசாரிக்க தமிழக சமூக நலத்துறை மூன்று மாவட்டங்களில் தனி நீதிமன்றம் அமைக்க உள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்களை தடுக்க போக்ஸோ என்னும் சட்டம் கடந்த 2012ல் கொண்டு வரப்பட்டது.   அந்த சட்டம் தற்போது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.   கடந்த இரு வருடங்களில் இந்த சட்டத்தின் கீழ் 2000 வழக்குகள் நிலுவையில்  உள்ளன. குறிப்பாகச் சென்னை நகரில் மட்டும் 300 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது இந்த குற்றங்களை விசாரிக்கத் தனி நீதிமன்றம் இல்லாததால் இந்த வழக்குகள் பெண்கள் நல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.   ஏற்கனவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் ஏராளமாக உள்ளன.  எனவே இந்த குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

போக்ஸோ சட்டத் திருத்தத்தின் படி இந்த வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டியது அவசியமாகும்.   இதையொட்டி உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காகத் தனி நீதிமன்றம் அமைக்க யோசனை கூறியது.   அத்துடன் 100 வழக்குகளுக்கு மேல் நிலுவை உள்ள மாவட்டங்களில் விரைவு நீதிமன்றமாக இவற்றை அமைக்கவும் அமர்வு வலியுறுத்தியது.

அதையொட்டி தமிழக சமூக நலத்துறை முதல் கட்டமாக மூன்று  மாவட்டங்களில் போக்ஸோ சட்டத்துக்கான விரைவு நீதிமன்றங்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.  அந்த நீதிமன்றங்கள் சென்னை, தூத்துக்குடி, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது.  தற்போது மூன்று மாவட்டங்களில் அமைக்கப்படும் இந்த நீதிமன்றம் அங்கீகாரம் பெற்ற பிறகு மற்ற மாவட்டங்களிலும் அமைக்கபட உள்ளது.

More articles

Latest article