நாகர்கோவில்,
ஓகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் ஏராளமானோர் இந்த புயல் காரணமாக இன்னும் கரை திரும்ப வில்லை.
புயல் மற்றும் சூறைக்காற்று, கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் ஏராளமான குளங்கள் நிரம்பின. இதன் காரணமாக பல குளங்கள் உடைந்து அந்த மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான கிராமங்களின் சாலைகள் துண்டிக்கப்பட்டும் வெள்ளத்தால் சூழப்பட்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தற்போதுதான் அந்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாகர்கோவில் அருகே சுசிந்திரம் பகுதியில் பார்வையிட்டார்.
முதலில் அவர் சுசீந்திரம் அருகே உள்ள பாலகிருஷ்ணன் புதூர் கிராமத்துக்கு சென்றார். அங்கு வீடுகள் இடிந்து பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர் நிவாரண பொருட்களும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
‘ஓகி’ புயலால் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப் பில் ரப்பர், தென்னை மரங்களும், 1 லட்சம் ஏக்கரில் பயிரிட்ட வாழை, நெற்பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை சுத்தமான குடிநீர், மின்சாரம், சாலை வசதி கிடைக்கவில்லை. எனவே முதலில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். தொடர்ந்து, அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க பா.ம.க. சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
குமரி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை போதாது.
எனவே, இதை தேசிய பேரிடராக அறிவித்து கூடுதல் நிவாரண தொகை ஒதுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கி, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் கடலில் மாயமாகி உள்ளனர். இவர்களை மீட்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாடி வருகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு செலவிடும் தொகையை இந்த மாவட்டத்தில் நிவாரண பணிக்காக செலவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.