சென்னை: தமிழ்நாட்டில் 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை  (SIR) தொடங்கியது. அதன்படி வீடு வீடாக சென்று பணிகளை பிஎல்ஓக்கள்  (BLO  பூத் லெவல் ஆபீசர்  -Booth Level Officer) மேற்கொண்டு உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களையவும், போலி வாக்காளர்களை (இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், போலி வாக்குகள்) நீக்கவும், இந்திய தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி’யை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணி, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன், இன்று ( நவம்பர் 4) முதல் தொடங்கி உள்ளது.

அதன்படி,  வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர் உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்படும். மேலும், போலியான ஆவனங்கள் மூலம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ள அகதிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக விரோதிகள் போன்றவர்களை களையெடுக்கும் வகையில்,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக, தகுதியான வாக்காளர்களை மட்டும் கொண்ட துல்லியமான பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து,  இந்தத் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை அரசு ஊழியர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் செய்யும் பணியானது, தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலுக்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று முதல் வீடு வீடாக தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக, இன்று 4-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுப்பார்கள். 2-ம் கட்டமாக 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். 3-ம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை பெறப்படும். 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.