சென்னை: நாளை (நவம்பர் 5) தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம், அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் தொகுதிவாரியாக மக்கள் சந்திப்பு நடத்தினார். ஆனால், திருச்சி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அவர் வீட்டிலோய முடங்கி கிடக்கிறார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களை சென்னை வரவழைத்து ஆறுதல் தெரிவித்த விஜய் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்ததார். அதன்பிறகு கட்சி பணிகளில் மீண்டும் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ச்சியாக, கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் அடுத்த கட்ட தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தவெக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கழகத் தோழர்களுக்கு வணக்கம். கழகத் தலைவர் அவர்களின் தலைமையில், நாளை (05.11.2025, புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள கழகச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டுவந்து, சிறப்புப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.