இடதுசாரிகள் தோற்றது ஏன்? சிங்கப்பூர் சொல்லும் செய்தி!: டி.என். கோபாலன்

Must read

சிறப்புக்கட்டுரை:
டதுசாரிகளின் உலகளாவிய தோல்விக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிங்கப்பூர் சமூக, பொருளாதார அமைப்பும் சில விடைகளைத் தருகின்றன.
வரலாற்றை மீளாய்வு செய்வதிலோ தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வதிலோ என்றுமே நேர்மையைக் கடைபிடித்திடாத கம்யூனிச சிந்தனையாளர்கள், சிங்கப்பூரிலிருந்தும் பாடம் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை. இனியும் கற்றுக்கொள்ளப்போவதில்லை.

சிங்கப்பூர் காட்சிகள்..
சிங்கப்பூர் காட்சிகள்..

சோவியத் யூனியனைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் கம்யூனிச அரசுகள் வீழும்வரை, அத்தகைய அரசுகளே உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும் எனப் பலர் நம்பினோம். பல்வேறு சிக்கல்கள், குழப்பங்கள், கருத்து சுதந்திர மறுப்பு, அடக்குமுறை எனத் தெரிந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு விளக்கம் வைத்திருப்போம். சமாதானம் சொல்லிக்கொள்வோம்.
அந்தக் கட்டத்தில் சிங்கப்பூர், தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்தை கைக்கொண்டு, பிரமிக்கத்தகு முன்னேற்றத்தினை அடைந்துவருவதாக செய்திகள் வெளியாகும். ஒன்று இவையெல்லாம் முதலாளித்துவ ஊடகங்களின் திரிப்பு என்போம், இல்லையெனில்,  அந்நாடுகளிலும் ஏதோ ஒரு விதத்தில் சர்வாதிகாரமே, ஆனால் அதனை வசதியாக கம்யூனிச எதிர்ப்பாளர்கள் மறந்துவிடுகின்றனர், அல்லது மறைத்துவிடுகின்றனர். சில அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் அந்நாடுகள் செழிக்கின்றதல்லவா, அதைப் போன்றுதான் எங்கள் சோஷலிச நாடுகளும் முன்னேறி வருகின்றன, ஆனால் பூர்ஷ்வா ஊடகங்கள், இருட்டடிப்பு செய்கின்றன, முதலாளித்துவத்தாண்டி எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத பொருளாதார நிபுணர்களும் சோஷலிச சோதனை தோற்கவேண்டுமென்பதற்காக இல்லாதது, பொல்லாதத்தையெல்லாம் சொல்கின்றனர் என்று என் போன்றோர் ஆத்மார்த்தமாக நம்பினர்.
அது ஒரு மறுப்பு மனோநிலை, நமது நம்பிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தல் என்பதை அப்போது என்னால் உணரமுடியவில்லை.
அப்பாவி, அசட்டு கம்யூனிஸ்டுகளின் கனவுகள் தகர்ந்து, எல்லாம் ஏறத்தாழ முடிந்துவிட்ட இன்றைய நிலையில், மெல்ல மெல்ல உண்மை உறைக்கிறது. ஒரே ஒருமாதம் தான் நான் சிங்கப்பூரில் தங்கிவிட்டுத் திரும்பியிருக்கிறேன். உருப்படியான ஆராய்ச்சியில் ஈடுபடமுடியவில்லை, அப்படி இறங்கியிருந்தாலும் எனக்கு எவ்வளவு சுதந்திரம் இருந்திருக்கும் என்பதும் கேள்விக்குறியே.
ஆனால் வழக்கம்போல பார்ப்போரிடமெல்லாம் தீவிரமாக விசாரித்து, செய்திகளைக் கவனமாகப் படித்து, சில பகுதிகளை சுற்றிப் பார்த்ததன் விளைவாய் என்னால் சிலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. இறுதியில் இச் சின்னஞ்சிறு நாட்டின் முன்மாதிரியினைக் கடைபிடித்திருந்தால் சோஷலிசம் இப்படி அதிர்ச்சிமிகு தோல்விகளை சந்தித்திருக்காதே என ஏக்கப் பெருமூச்சுவிட்டுக்கொண்டே திரும்பினேன்.
பெடோக் பகுதியில் அமைந்துள்ள் தொகுப்பு வீடுகளின் தாழ்வாரம்
பெடோக் பகுதியில் அமைந்துள்ள் தொகுப்பு வீடுகளின் தாழ்வாரம்

மோடி தலைமையிலான குஜராத் மாடலில் ஆயிரத்தெட்டு குறைகள், கொடுமைகள், வக்கிரங்கள், அனைத்தையும் மீறி அவர் அங்கே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் என்றால் அதற்குக் காரணம் மதவெறி, விஷப்பிரச்சாரம் மட்டுமல்ல, மாறாக அவர் ஒரு பொறுப்பான நிர்வாகத்தினை உறுதிப்படுத்தினார் என்பதுதான்.
தொடரவிருந்த தேர்தல்களில் பாஜக  தோல்வியடையக்கூடும் என்ற சூழலில், 2002 கலவரங்களை மூட்டிவிட்டு குளிர்காய்ந்தவர், அதன் பின் வன்முறைகள் தலை தூக்கா வண்ணம் பார்த்துக்கொண்டதுமட்டுமல்ல ஒப்பீட்டளவில் ஏதோ ஒருவித வளர்ச்சி, மக்களின் தேவைகளை ஆங்காங்கே கணிசமான அளவு நிறைவு செய்வது என்ற ரீதியில் அவர் செயல்பட்டார்,
மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் ஊழல்கள் அம்பலமாக, ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு 2002ஐ, முஸ்லீம்கள் ஒதுக்கப்படுவதை ஒதுக்கிவைப்போம், குஜராத்தின் முன்னேற்றம் பிரமிக்கத்தக்கதே, என ஒரேயடியாக அளந்துவிட, கலவர சூத்திரதாரி பிரதமராகிவிட்டார்.  குகையைத் தேடும் பழைய பஞ்சாங்க சக்திகளின்  கரங்கள் ஓங்கிவிட்டன. மோடி மாயை அடுத்த தேர்தல்கள் வரை கூட நீடிக்கலாம். ஆனால் குஜராத்தில் மோடி தலைமை எவ்வளவு முக்கியமானது என்பதை அம்மாநிலத்தின் அண்மைய நிகழ்வுகள் நமக்குத் தெரியப்படுத்துகின்றன.
மோடிக்கும் சிங்கப்பூரின் வியத்தகு முன்னேற்றத்திற்குக் காரணமான லீ குவான் யூவிற்கும் ஒற்றுமைகள் உண்டு. இருவருமே இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்பாளர்களை அடக்கினர், அதே நேரம் கணிசமான அளவில் பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்தனர்.
சுதந்திரமாக செயல்பட்டதாலும், ஒரு பிரதமருக்குரிய அனைத்து அதிகாரங்கள் அவரிடம் இருந்ததாலும், அமெரிக்க ஆதரவு முழுமையாக இருந்ததாலும், லீ குவான் யூ பல்லாயிரம் படிகள் முன்னே சொல்லமுடிந்தது.
,மேலும் மோடியிடம் இல்லாத ஒரு நல்லியல்பும் லீ மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் இருந்தது – சற்றும் மத, இன காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அவர்கள் செயல்பட்டனர். இன்று 57 லட்சம் மக்கட் தொகையில் சீனர்களே பெரும்பான்மை, 74 சதம். மலாய் இனத்தவர் 13 சதம், தமிழர்கள் ஏறத்தாழ 10 சதம்.
சீனர்கள் அரசுக்குத் தலைமை தாங்கலாம்தான், அவர்கள் கரங்களே ஓங்கியிருக்கும். ஆனால் எவ்வினத்தவரும் புறக்கணிக்கப்படுவதில்லை. எவரும் இனத்தின் காரணமாய் ஒதுக்கப்படக்கூடாது, துன்புறுத்தப்படக்கூடாது என்பதில் லீ குவான் உறுதியாயிருந்தார்.
அங்கே மசூதிகள் கூட சாதாரண கட்டிடங்களாகவே காணப்படும். அவற்றை இனங்காட்டும் ஸ்தூபிகள் கிடையாது. அசானுக்கெல்லாம் அனுமதியில்லை.
கிறித்துவ தேவாலயங்கள் அல்லது இந்துக் கோயில்கள் எங்கிருந்தும் இரைச்சல் வெளிப்படக்கூடாது,
அரசு இயந்திரத்தில் எவ்வித பாகுபாடும் கிடையாது. எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். இது அங்கே நல்லிணக்கம் தொடர வழி வகுக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இத்தகைய சகஜமான சகவாழ்வைப் பார்ப்பது அரிது.
சிங்கப்பூர் குடிமக்கள் அனைவர்க்கும் வீடு என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இலவசமாக கட்டிக்கொடுக்கப்படவில்லை. ஆனால் அரசே தொகுப்பு வீடுகள் கட்டி, அவற்றை வாங்குவதற்கு சலுகை வட்டியில் கடனும் கொடுக்கிறது,
அவ்வாறு வீடுகள் கட்டும்போது கூட தொகுப்புக்கள் வாரியாக இனங்கள் பிரிந்துவிடக்கூடாது என்ற தொலைதூர நோக்குடன், ஒவ்வொரு தொகுப்பிலும் மூன்று பிரிவினரும் சேர்ந்து வாழும் முறையினை ஏற்படுத்தினார் லீ.
போக்குவரத்து பற்றி பலர் கேள்வியுற்றிருப்பீர்கள். மின்சார தொடர்வண்டி மற்றும் பேருந்து வசதிகள் உலகத் தரமானது. இந்த அளவு அமெரிக்காவிலோ மேற்கு நாடுகளிலோ கூட இருக்காது. அனைத்தும் குளிர்சாதன வசதியுடனேயே.
லிட்டில் இந்தியா கவலவரம் (கடந்த வருடம்)
லிட்டில் இந்தியா கவலவரம் (கடந்த வருடம்)

நாம் போக்குவரத்திற்கென உரிய தொகை கட்டி அட்டை வாங்கிவிட்டால், எதில்வேண்டுமானாலும் பயணிக்கலாம். பஸ்சில் நடத்துநர் கிடையாது. நுழையும்போது நமது கார்டை அதற்கான இயந்திரத்தின் மீது அழுத்துகிறோமா என்று மட்டும் ஓட்டுநர் பார்ப்பார். இறங்கும்போது அவர் பார்க்கவில்லையே என அழுத்தாமல் இருந்துவிட்டால் இறுதி இடம் வரைக்கான கட்டணம் கழிக்கப்பட்டுவிடும். தொடர்வண்டியிலும் அதே போன்ற ஒழுங்குமுறை.
பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் எந்த வழியில் போகும் எங்கெல்லாம் நிற்கும், எத்தனை நேரமாகும் என்று கூறும் வரைபடப் பலகைகள். நமது தொலைபேசியின் அதற்கான ஆப் இருந்தால், பஸ் வந்துகொண்டிருக்கிறதா இல்லையா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்,
தொடர்வண்டி, பேருந்து இரண்டிற்கும் ஒரே அட்டைதான். நம் நாட்டிலும் இவ்வாறு இரு வகைப் போக்குவரத்துக்களையும் இணைக்கும் வழிகள் பற்றி நீண்ட நாட்களாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஒன்றும் நடக்கத்தான் காணோம்.
எங்கிருந்து மின்சாரம் உற்பத்தியாகிறது என்பது தெளிவாக இல்லை. ஆனால் விநியோகம் தடைபடுவதில்லை. அதே போலத்தான் குடிநீர்.
அதாவது நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதியாக வாழமுடியும். எல்லாம் பொதுவாக சீராக இயங்குகிறது. ஆனால் ஏதோ சொர்க்கபுரி சிங்கப்பூர் என்று நான் சொல்வதாக தவறாக எவரும் நினைத்துவிடவேண்டாம்.
லீ குவான் யூ
லீ குவான் யூ

குறிப்பாக சிங்கப்பூரில் உடல்நலம் பேணுவது பெரும் பிரச்சினை. மருத்துவர், மருத்துவமனைகள் கட்டணமெல்லாம் மிக அதிகம். நாமாக வைத்தியம் பார்த்துக்கொள்கிறோம் என எந்தக் கடையிலும் நுழைந்து மருந்துகள் வாங்கிவிடமுடியாது. மருத்துவக் காப்பீடு இருக்கிறது. ஆனால் எல்லோராலும் அதற்கான பிரீமியங்களைக் கட்டிவிடமுடியாது.
ஏற்றத்தாழ்வும் மிக அதிகம். அது கூடிக்கொண்டே போகிறது. மேலும்  உலகளாவிய பொருளாதாரத் தேக்கம் சிங்கப்பூரையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போதிருக்கும் வசதிகளெல்லாம் எத்தனை நாள் தொடரும் என்றும் பலர் கவலைப்படுகின்றனர்.
மேலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில். 15 லட்சம் அளவில். அவர்கள் வாழ்விடங்களெல்லாம் நெரிசலாக இருக்கும். வசதிகள் குறைவாக இருக்கும். நீண்ட நேரம் வேலை. அடித்துப்போட்டது போலத்தான் அவர்கள் தங்குமிடம் திரும்புவார்கள். ஊதியத்தில் ஏமாற்றுவார்கள், கேட்கமுடியாது.
மூன்றாண்டுகள் முன் ஒரு கலவரம் வெடித்ததே லிட்டில் இந்தியா பகுதியில். அவைகூட ஒடுக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் கிளர்ச்சி எனக் கருதப்படுகிறது. சம்பவங்களில் தொடர்பிருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதன் பிறகு கெடுபிடிகள் அதிகரித்தன. கூடவே சில வசதிகளும்.
நடுத்தரவர்க்கம் நிம்மதியாய் இருக்க எத்தனை ஆயிரம் பேர் துயருறவேண்டியிருக்கிறது. நான் விசாரித்தபோது பல இந்தியத் தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனாலும் சிலர் இந்த அளவாவது பொருளாதாரப் பாதுகாப்பு சிங்கப்பூரில்தான் உறுதிசெய்துகொள்ளமுடிகிறது, தமிழகத்தில் அல்ல என்றனர்.
வீடுகள், போக்குவரத்து, கல்விக்கூடங்கள், பொருளாதாரம் இப்படி எத்துறையில் பிரச்சினை தோன்றினாலும் அவற்றைக் களைவதில் சிங்கப்பூர் அரசு மேலதிக அக்கறை காட்டிவருகிறது.
அரசியல் பற்றிப் பேசவே சாதாரண மக்கள் அச்சப்படுகின்றனர் என்பது உண்மையே. ஆனால் வாழ்க்கை சீராக இயங்குமானால், அவர்கள் எதற்காக அரசியலைப் பற்றிக் கவலைப் படப்போகின்றனர்?
டி.என். கோபாலன்
டி.என். கோபாலன்

என்னை உறுத்தும் கேள்வி இதுதான்: கம்யூனிஸ்டுகளும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில்தான் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அடித்தளம் வலுவாக அமைய, உரிமைகள் சிலவற்றைத் தியாகம் செய்யலாம்தான். ஆனால் அரசு பொறுப்பானதாக அமையவேண்டுமே.
ஸ்டாலினும் சரி அவர் பின்னால் வந்தோரும் சரி, அவர்கள் எதிர்ப்பை ஒடுக்குவதில் காட்டிய தீவிரத்தினை மக்கள் வாழ்நிலை மேம்படுத்துவதில் காட்டவில்லை. நிலை மோசம் என்ற செய்திகள் வெளி உலகிற்குத் தெரியக்கூடாது என்பதில் காட்டிய கவனத்தினை, மக்களின் பிரச்சினைகள் என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றுக்கு தீர்வு காண்பதில் காட்டவில்லை.
லீ குவான் யூ, ஒரு சர்வாதிகாரிதான். அவருக்கு சமத்துவத்தில், சமூக நீதியில் அக்கறை ஏதுமில்லை. ஆனால் அதிக பிரச்சினை இல்லாமல் சமூகம் இயங்கவேண்டுமென்றால், அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படவேண்டுமென அறிந்துவைத்திருந்தார். அதற்கேற்பவே அவர் செயல்படவும் செய்தார்.
ஒரு வலதுசாரி சிந்தனையாளருக்கு இருந்த புரிதல் மானுட விடுதலைக்காகப் புறப்பட்டவர்களிடம் இல்லாமல் போனதுதான் பெரும் சோகம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article