டில்லி
நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவுக்கு சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகள் அதிக செலவு நடக்கும் தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதே தினத்தன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகிறது.
நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையம் முன்னாள் அரசு அதிகாரிகளான திரு சைலேந்திர ஹண்டா மற்றும் திருமதி மது மகாஜன் ஆகியோரை சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமித்துள்ளது. சைலேந்திர ஹண்டே மகாராஷ்டிரா மாநிலத்திலும் மது மகாஜன் தமிழகத்திலும் தேர்தல் செலவினங்களை கவனிப்பார்கள்.
இவர்கள் இருவரும் தகவல் தொழில் நுட்பத்துறையின் புலனாய்வு பிரிவில் பணி புரிந்துள்ளனர். பல முக்கிய வழக்குகளில் இவர்கள் திறம்பட புலனாய்வு செய்துள்ளனர். இவர்கள் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைககளை எடுக்க உள்ளனர்.
அத்துடன் இணையத்தின் மூலம் வரும் அனைத்து புகார் மீதும் இவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் வாக்காளர் புகார் தொலைபேசி எண்ணான 1950 மூலம் வரும் புகார்களையும் கவனிப்பார்கள். நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்களுக்கு யாரும் பணமாகவோ, பொருளாகவோ, மது பானமாகவோ லஞ்சம் அளித்தால் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுப்பார்கள்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.