விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது உள்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கை,  விழுப்புரம் நடுவர் நீதிமன்றம்  செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கச் சென்ற பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொல்லி பாலியல் சேட்டை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில்,   சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார், கடந்த 29-ம் தேதி விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதையடுத்து வழக்கு கடந்த 9ந்தேதி  விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, , பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களுக்கு நடுவர் மன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது.

தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அபபோது, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு சிறப்பு டிஜிபி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை வருகின்ற செப்டம்பர் 2-ம் தேதிக்கு குற்றவியல் நடுவர் மன்ற நடுவர் கோபிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.