சென்னை; வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றவர், இந்தாண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைப்பார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதிவாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி அறிவுரை வழங்கி உள்ளார்.
இநத் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுடனான இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை அதிகமாக இருந்தாலும் எவ்வித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெறும் பணிகள், மற்றும் முடியாமல் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மின்சாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றவர், தற்போதைய நிலையில், 14,442 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்), 1,50,932,12 மின்கம்பங்கள் மற்றும் 780 கி.மீ அளவிற்கு மின் கம்பிகள் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறினார்.
சென்னையில் 5 கோட்டங்களில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணிகள் 2 மாதத்தில் முடிவடையும் என்று தெரிவித்தவர், அடுத்த 2 மாதங்களில் சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் பணிகள் நடைபெறவுள்ளது என்றார். மாநிலம் முழுவதும், சேதமடைந்த 39,616 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், 25,080 புதிதாக மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது எனவும், 1,759 கி.மீட்டருக்கு புதிதாக மின்கம்பிகள் புதிதாக போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மின்னகத்தில் மழை காலங்களில் அதிக அழைப்புகள் வரும் என்பதால் கூடுதலாக ஒரே நேரத்தில் 60லிருந்து 75ஆக தொலைப்பேசி இணைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தில் சொந்த நிறுவுதலில் 50 விழுக்காடு மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் .
கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்ட போல், இந்தாண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறினார்.