சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறை வருவதால் வோட்டர்ஸ் கேம்ப் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு,  இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும்,   இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்களை வழங்கலாம். நேரடியாக வாக்காளர் பதிவு அதிகாரியிடமும் உரிய படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்துடன்,   பணியாற்றுவோர் வசதிக்காக, 4 வார இறுதி நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 69,000 திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, நவ. 9, 10 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, 4 நாட்கள்  தொடர் அரசு விடுமுறை வருவதால், சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகள் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி,  நவ. 9, 10 பதில், நவ.16, 17 ஆகிய இரு நாட்களுக்கு முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.