சென்னை: முழு ஊரடங்கு நாளான வருகிற ஜன 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பேருந்துகளில் ஏற்கனவே பல ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், 16ந்தேதி முழு ஊரடங்கு அன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஞாயிரன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படாது. அரசு பேருந்தில் வெளியூர் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு செலுத்திய முன்பதிவு கட்டணம் 2 நாட்களில் திருப்பித் தரப்படும் என்றும், 16ம் தேதி முன்பதிவு செய்தவர்கள் வேறொரு நாளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 16ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்புவோர் மறுநாள் திங்கள் கிழமைதான் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.