சென்னை

இன்று ஆஞ்சநேயர் பிறந்த நாளை முன்னிட்டு நாடெங்கும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்து புராணத்தின படிமார்கழி அமாவாசை மூலம் நட்சத்திர நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார் எனக் கூறுகின்றன. இன்று தென் இந்தியாவில் மார்கழி அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.  பூவுலகம் உள்ளவரையில்  சிரஞ்சீவியாக வாழ்ந்து வரும் ஏழு பேர்களில், ஆஞ்சநேயரும் ஒருவர் ஆவார்.

ருத்ரனின் அம்சமாக, பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு பகவானின் மைந்தனாக, பஞ்சபூதங்களின் சக்தியையும் ஒருங்கே பெற்றவராக அவதரித்தவர். யாராலும் செய்ய முடியாத அசாத்தியமான செயல்களை எல்லாம் அநாயசமாக செய்பவர். எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம், அரூபமாக இருந்து அந்த ராம நாமத்தை கேட்டுக்கொண்டிருப்பவர்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரே கடவுள். மனிதர்கள் முதல் நம்மை படைத்த கடவுள் வரை அனைவரையும் தன்னுடைய பார்வையால் நடுங்கச் செய்யும் சனீஸ்வரரையே ஆளைவிட்டால் போதும் என்று ஓட வைத்தவர். இதனாலேயே ஆஞ்சநேயரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பிடித்தமானவர்.

அனுமனை வழிபடுபவர்கள் பெரும்பாலும் வெண்ணெய் காப்பு செய்தும், வெற்றிலை மாலை சமர்பித்தும் வழிபடுவது வழக்கம். அசோகவனத்தில் சீதையை கண்ட ஆஞ்சநேயருக்கு வெற்றிலையை தூவி ஆசி வழங்கியதாலும், போரில் ஏற்பட்ட காயத்தினால் உண்டான வெம்மையை குறைக்கவும் ஆஞ்சநேயருக்கு சீதை வெண்ணெயை தடவியதாலும், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பும், வெற்றிலை மாலையும் அணிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அனுமன் பக்தர்கள் தங்கள் காரியம் வெற்றி பெற வெற்றிலை மாலை சாற்றி வேண்டி வழிபடுகின்றனர். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அன்னை சீதா தேவியை தேடி அலைந்த ஆஞ்சநேயர் கடைசியில் அவரை இலங்கையில் அசோகவனத்தில் சிம்சுகா மரத்தடியில் சோகமே உருவாக இருந்ததைக் கண்டு கலங்கினார். தான் பகவான் ஸ்ரீராமபிரானின் தூதுவனாக வந்திருப்பதை விவரித்து, ஸ்ரீராமபிரான் கொடுத்த கணையாழியை சீதா தேவியிடம் கொடுத்து அவரிடம் இருந்து சூடாமணியை பெற்றுக்கொண்டார்.

அன்னை சீதா தேவியிடம் விடைபெற்று கிளம்பும்போது, ஆஞ்சநேயரை ஆசீர்வதிக்க எண்ணினார். ஆனால், ஆசீர்வதிக்க அட்சதையோ புஷ்பங்களோ கிடைக்கவில்லை. அங்கே ஒரு வெற்றிலைக் கொடி படர்ந்திருந்ததைக் கண்ட ஆஞ்சநேயர், அதிலிருந்து சில வெற்றிலைகளை பறித்து மாலையாக கோர்த்து, அதை சீதா தேவியிடம் கொடுத்து, என்னை ஆசீர்வதியுங்கள் அன்னேயே என்று வேண்டி பணிந்து நின்றார்.

ஆஞ்சநேயரின் சமயோசித புத்தியை கண்டு மகிழ்ந்த அன்னை சீதா தேவி, அந்த வெற்றிலை மாலையை ஆஞ்சநேயரின் கழுத்தில் அணிவித்து, என்றைக்கும் நீ சிரஞ்சீவியாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்தார். அதன் காரணமாகவே, பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ராவணனைக் கொன்று, ஸ்ரீராம பிரான் சீதா தேவியை சிறையிலிருந்து மீட்ட உடன், இருவரையும் பணிந்து வணங்கினார் ஆஞ்சநேயர். அப்போது அவருடைய உடல் முழுவதும் இருந்த காயங்களைப் பார்த்து பதறிய அன்னை சீதா தேவி, வெண்ணெயைக் கொண்டு ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் பூசிவிட்டார். இதனால், அவரின் உடலில் இருந்து காயங்கள் மறைந்ததோடு, அவரின் உடலில் இருந்த வெக்கையும் தணிந்தது.

அன்னை சீதா தேவியின் செயலால் மனம் நெகிழ்ந்த ஆஞ்சநேயர், தனக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களின் நோய் ஸ்ரீராம பிரானின் அருளால் முழுமையாக குணப்படுத்துவேன் என்று உறுதியளித்தார். அன்றிலிருந்து ஆஞ்சநேயரை தரிசிக்க செல்பவர்கள் வெண்ணெயை அவர் மீது சாற்றி வழிபடுகின்றனர்.

ஸ்ரீகண்ணபிரான் வெண்ணெயை கொடுத்து, இந்த வெண்ணெய் உருகுவதற்குள், உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களை அழித்து நீதியை நிலைநாட்டுவாயாக என்று ஆசீர்வதித்தார். ஸ்ரீகண்ணபிரான் ஆசீர்வதித்தது போலவே, ஆஞ்சநேயரும் இரண்டு அசுரர்களையும் அழித்து வெற்றி வாகை சூடினார். இதனால் தான் பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் வெற்றியடைய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுகின்றனர்.