டாஸ்மாக்.. எதிர்ப்புகளின் பின்னால் போலித்தனம்..

ஒரு விஷயத்தை உண்மையிலே ஒழிப்பதற்கும் ஒழிக்கிற மாதிரி காட்டிக்கொண்டு காலம் முழுவதும் விளம்பர வெளிச்சத்தில் நிறைய வித்தியாசம் உண்டு. இதில் இரண்டாவது ரகம்தான் டாஸ்மாக் ஒழிப்பு என்ற பெயரில் நடந்துவரும் அக்கப்போர்கள்..

மேலோட்டமாக பார்த்தால், மதுவை ஒழிக்கத்தானே போராடுகிறார்கள், இது நல்ல விஷயம்தானே என்று கேட்கத்தோன்றும். ஆனால் உள்ளே போய் அலசினால்தான், மது ஒழிப்பார்கள் எந்தெந்த புள்ளியில் நிலையாக நின்றுகொண்டு அதைவிட்டு அகலாமல் காலந்தள்ளுகிறார்கள் என்பது புரியவரும்,

இந்த விவகாரத்தில் மது. வகைகள், அருந்துபவர்கள் ஏமாற்றப்படும் விதம், குடிகாரர்களை வைத்து கூச்சமே இல்லாமல் நடக்கும் கொள்ளை என பல கட்டங்கள் உள்ளன. அவற்றை முழுவதுமாக பார்க்காவிட்டால், கடைசிவரை. பொத்தாம் பொதுவாகக் கத்திக்கூச்சலிட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான். எனவே அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். முதலில் மது என்ற சமாச்சாரம்.

உலகம் முழுவதும் மது என்பது உணவுப்பொருட்கள் போலவே. அவற்றின் தரத்தையொட்டிய அளவிலேயே இருந்துவருகிறது அதாவது உடலுக்கு மிகமிக மோசமான கெடுதியை ஏற்படாமல் மிதமாக இருக்கும் அளவுக்கே தயாரிக்கப்படுகிறது.

இங்கே தமிழகத்தில் வெளிநாட்டு மதுவகைகளை தயாரிக்க அரசாங்கம் பல்வேறு அளவுகோல்களையும் விதிமுறைகளையும் நிர்ணயித்துள்ளதாக சொல்கிறது. அதன்படியே தயாரித்து வாடிக்கையாளர்களிடம் விற்கப்படுவதாகவும் அதை கண்காணிப்பதற்கென அரசின் அமைப்புகள் சில உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அரசாங்கம் சொல்கிறபடி அப்படியே விதிமுறைகள் மீறாமல் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில்தான் மதுவகைகள் தயாரிக்கப்படுகின்றனவா என்பதை, எந்த மது எதிர்ப்பு அரசியல்வாதியாவது பரிசோதனை கூடங்கள் உதவியுடன் அக்குவேறு ஆணிவேராகத் தோண்டியிருக்கிறாரா? அந்த விஷயங்களை அம்பலத்தில் வைக்க என்றைக்காவது என்று முயன்றிருக்கிறாரா என்று பார்த்தால் இருக்கவே இருக்காது.,

முதலில், விற்கப்படும் மது,வகைகள் மதுவுக்கான தரத்தில்தான் இருக்கிறதா என்பதை, வெளிநாடுகளில் வேண்டாம் வெளிமாநிலங்களில் மது அருந்தி விட்டு இங்கு வந்து அனுபவம் ஏற்பட்டவர்களைக் கேட்டுப்பார்த்தால் உண்மை விளங்கும்.

 நிதானமாகவும் உரிய காலம் கொடுக்கப்பட்டும் உற்பத்தி செய்யப்படவேண்டிய மது, எவ்வளவு சீக்கிரமா உற்பத்தி செய்யப்பட்டு சுடச்சுட கடைகளுக்கு வருகிறது என்பதைப் பார்த்தாலே தெரியும் அதன் தரம் எப்படி என்பது…

அடுத்து, கடைக்கு வரும் மதுவகைகளை எப்படி விற்க வேண்டும் என்ற நெறிமுறைகள்.. தமிழக அரசு இதனை முறைப்படியும் விதிகளின்படி விற்கிறதா என்பதை யாராவது கிடுக்கிப்பிடி போட்டுக் கேட்கிறார்களா? கேட்கவே மாட்டார்கள்..

ஆந்திரா கர்நாடகம் மும்பை என எந்த மாநிலங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள், அங்குள்ள  மது கடைகளில் பல்வேறு விதமான மது வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்..

வாடிக்கையாளர் தனக்கு விருப்பப்பட்ட வகையை வாங்கிக் கொள்ள அவருக்குப் பரிபூரணமாகச் சுதந்திரம் உண்டு. இதைத்தான் வாங்கவேண்டும் என்ற எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லை..

பாகுபாடு பார்க்காமல் விற்பனையின் தன்மைக்கு ஏற்ப  மது ஆலைகளிடமிருந்து அந்த மாநில அரசுகள் கொள்முதல் செய்கின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று எவை  அதிகமாக விற்பனை ஆகிறதோ அந்த வகை பிறாண்டுகளுக்குத்தான் அரசு கொள்முதலில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும்

ஆனால் தமிழ்நாட்டிலோ நிலைமை முற்றிலும் தலைகீழாக இருக்கும். .

குறிப்பிட்ட ஐந்தாறு  மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மட்டுமே தமிழக அரசு கொள்முதல் செய்யும்..இதுபற்றி கேட்டால் கொள்கை முடிவு என்று சொல்வார்கள்..யார் யாரிடம் இருந்து மதுவகைகள் வாங்குகிறார்கள் என்று பார்த்தால் அந்த நிறுவனங்கள் ஒன்று  ஆட்சியாளர்களின் தொடர்பில் இருக்கும். இல்லையென்றால் எதிர்கட்சியினருடையதாக இருக்கும். இல்லை என்றால் இரு தரப்புக்கும் வேண்டப்பட்ட பினாமி களைக் கொண்டதாக இருக்கும்.

ஆன்லைனில் மதுவிற்பனை என்றால், வாடிக்கையாளர்களிடம் இப்படிக் குறிப்பிட்ட மதுவைத் திணிக்கமுடியாது, எக்ஸ்ட்ரா வசூலும் தேறாது அதனால்தான் ஆன்லைன் விற்பனை விவகாரத்தைத் தமிழக அரசு ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறது.

எதிர்க் கட்சிக்கு இந்த மது கொள்முதலில் பங்கு இருப்பதால் வாயே திறக்காது. ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியா அதனுடன் கூட்டணியில் உள்ள உதிரி கட்சிகளும்.கூட்டணி தர்மம் காக்கும் வகையில் வாயே திறக்காது.

வாடிக்கையாளர்களுக்கு விருப்பப்பட்ட மதுவகைகளை வழங்காமல் விருப்பமில்லாதவற்றை ஏன் திணிக்கிறீர்கள் என்று எந்தக் கட்சியும் கேட்கவே கேட்காது. இப்படி ஒரு சமாசாரம் நடக்காதது போலவே காட்டிக் கொண்டு திரிவார்கள்.

விருப்பமான வகைதான் கிடைக்காது, நியாயமான விலையில்தான் விற்கிறார்கள் என்றால் அதுவும் கிடையாது .

மதுவை ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யும் அரசாங்கம் அதற்குப் பல விதமான வரிகளை வைத்துக் கிட்டத்தட்ட பத்து மடங்கு விலை வைத்து விற்கும். உதாரணத்திற்கு ஒரு குவாட்டர் பாட்டில் 120 ரூபாய் என்றால் அதனுடைய உற்பத்தி விலை வெறும் 15 ரூபாய் கூட இருக்காது .

இப்படி வரி மூலம் வசூலிக்கப்படும் பணம், அரசு கஜானாவுக்கு செல்கிறது என்பதால் அதை பொறுத்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். மதுபானத்தை மிகவும் மலிவான விலையில் விற்றால். அதிக அளவில் வாடிக்கையாளர்கள்  அருந்த ஆரம்பிப்பார்கள். அது பெரும் நாசத்தை விளைவிக்கும். .அதனால் அரசு நிர்ணயிக்கும் விலையை இங்கே யாரும் குறைசொல்லவில்லை. அது அரசின் வருவாயாக மக்களின் பயன்பாட்டுக்கு சென்று விடுவதால் அதை குற்றம் சொல்ல முடியாது
ஆனால் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு டாஸ்மாக்கில் மட்டுமே மதுபாட்டிகளுக்கு அதிகபட்ச சில்லறையை தாண்டி எக்ஸ்ட்ராவாக பணம் வசூலிக்கப்படுகிறது .
ஒரு குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் ஆப் பாட்டிலிலுக்கு பத்து ரூபாய, பீருக்கு 20 முதல் 25 ரூபாய் வரை  என  எக்ஸ்ட்ரா வசூல் இருக்கும்
பார்ப்பதற்கு வெறும் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் சமாச்சாரம் போல் மிகவும் சாதாரணமாக தெரியும் இந்த விஷயத்தை அலசினால், அடப்பாவிகளா என்றே  சொல்லத் தோன்றும் .
தமிழகத்தில் ஆண்டுதோறும் மது வகைகளின் மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாய் 32 ஆயிரம் கோடி .
இந்த ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என எக்ஸ்ட்ரா மூலம் தனியாக தேறுவது ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் . மலைத்துப் போகாதீர்கள். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்..
இந்த இரண்டாயிரம் கோடியையும்  டாஸ்மாக் கடைஊழியர்களே எடுத்துக் கொள்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. இதற்கு பின்னால் மிகப்பெரிய லாபி உண்டு . மண்டல டாஸ்மாக் அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் வரை இந்த எக்ஸ்ட்ரா ஷேர் ஆகும். என்கிறார்கள்.  இந்த எக்ஸ்ட்ரா பற்றி உள்ளுர் அரசியல்வாதிகள் பிரச்சினைளை கிளப்பாமல் இருக்க,, அவர்களுக்கும் அவ்வப்போது தந்தாகவேண்டும். அது இலவச சரக்கு விநியோகமாகக்கூட இருக்கலாம்.
மது வாடிக்கையாளர்களிடமிருந்து இப்படி  அடித்து பிடுங்கப்படும் இந்த இரண்டாயிரம் கோடி பற்றி பற்றி எந்த பெரிய  அரசியல்வாதியாவது குரலெழுப்பி  பார்த்திருக்கிறீர்களா? அதிகபட்ச சில்லரை விலையில் மட்டுமே மதுவகைகளை விற்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து முறைகேட்டுக்கு வேட்டுவைத்திருக்கிறார்களா? இருக்கவே இருக்காது
அடுத்து பார்கள் எனப்படும் மதுபான கூடம் விவகாரம், வெளிமாநில பார்களில். மது அருந்துபவர்களுக்கு சுகாதாரமான இடம் மற்றும் நியாயவிலையில் திண்பண்டங்கள் கிடைக்கும். குறிப்பாக தண்ணீரும் அருந்துவதற்காக கிளாசையும் இலவசமாக தருவார்கள். நொறுக்கு தீனிகளுக்குத்தான் விலை வைப்பார்கள்..ஆனால் தமிழகத்திலோ, அதையெல்லாம் நினைத்து பார்க்கவேமுடியாது.
பார்களில் சுகாதாரத்தைப்பற்றி நினைத்தெல்லாம் பார்க்கவேமுடியாது. சாக்கடையைவிட படுகேவலமாக இருக்கும்., அரசு சுகாதார ஆய்வாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பார்கள் சென்று ஆய்வு செய்தார்கள், தரமற்ற பார்களுக்கு சீல் வைத்தார்கள் என்று என்றைக்காவது செய்தியை படித்திருக்கிறீர்களா? இருக்கவே இருக்காது.
இலவசமாக தரவேண்டிய கிளாஸ் பத்து ரூபாய், தண்ணீர் பாட்டில் விலையோ முப்பது ரூபாய். அதற்கப்புறம் இரண்டுரூபாய்க்கூட மதிப்பில்லா நொறுக்கு தீனிகள், பத்து ரூபாய் இருபது ரூபாய்.. நன்றாக கணக்கிட்டு பார்த்தோமானால், ஒரு குவார்ட்டர் சரக்கு, நொறுக்கு தீனி போன்றவற்றின் உற்பத்திச்செலவு அதிகபட்சம் 15 ருபாய் தாண்டாது.
ஆனால் இதனை பெற அரசாங்கத்தின் வரிகள், டாஸ்மாக் எக்ஸ்ட்ரா, பார்களின் கொள்ளைவிலை என ஒரு வாடிக்கையாளன் இரு நூறு ரூபாயை செலவழிக்கவேண்டும். 15 ரூபாய்விலைக்கு 185 ரூபாயை லாபமாக நிர்ணயித்து கொள்ளை அடிக்கிறார்கள்.. இந்த மோசடிகளை பற்றி யாராவது பேசியிருக்கிறீர்களா என்று பாருங்கள், எவருமே வாயை திறக்கமாட்டார்கள்.
அப்புறம் எல்லாவற்றையும்விட மிகப்பெரிய காமெடி, மதுக்கடைகளை குறைத்தாலும் கடைகள் திறப்பு நேரத்தை குறைத்தாலும் மதுவிற்பனையும் குறையும் என்பது. தமிழகத்தில் 500 கடைகள் 500 கடைகள் என படிப்படியாக மூடினார்கள். என்றைக்காவது விற்பனை சரிந்ததா? அதெல்லாம் நடக்கவே நடக்காது. விற்பனை என்பது ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டேதான் போகிறது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையும் வேலைநேரத்தையும் குறைந்ததால் என்ன பலன் கிட்டியது என்றால், கள்ளச்சந்தைக்கான நேரம் அதிகரித்து அந்த கும்பல்களுக்கு வருவாய் மேலும் மேலும் கொட்டியதுதான் மிச்சம்..
இதுவரை சொன்னதையெல்லாம்த படித்தால், ஏதோ மதுவிற்ப்னைக்கு பலத்த ஆதரவு என்று தொணி மட்டுமே தெரியும்.  நாம் சொல்லவருவது என்ன செய்தாலும் அதை அரசாங்கம் நேர்மையாக செய்யவேண்டும் என்பதே..
தற்போதைய நிலையில் மது ஒழிப்பு என்பது நாடு தழுவிய அளவில் மத்திய அரசு கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம், உதாரணத்திற்கு கொரோனவை காரணம் காட்டி, நாடு முழுவதும் மது விற்பளையை மத்திய அரசு தடை செய்தது. 50 நாட்களுக்கு ‘’மதுவில்லாத தேசம்’’ என அது சாத்தியமும் ஆனது..
ஆனால் பல மாநிலங்கள் வருவாய்க்காக மதுவிற்பனையை பெரிதும் நம்பியிருப்பதால் மீண்டும் மதுவிற்பனையை துவங்க போட்டிபோட்டன. திறக்கவும் ஆரம்பித்தன. இதனால் மதுவிற்பனை இப்போதைக்குவேண்டாம் என மக்களுக்கு பயந்து பொறுமைகாத்த மாநிலங்கள்கூட வேறு வழியில்லாமல் மதுவிற்பனை வரிசையில் அவசர அவசரமாக சேர்ந்துகொண்டன. அப்படி வரிசையில் சேராவிட்டால், மற்ற மாநிலங்களிடம் மதுவிற்பனையை பறிகொடுத்து வருவாயை இழக்க நேரிடும் என்பது அந்த மாநிலங்களுக்கு நன்றாகவே தெரியும்.
உதாரணத்திற்கு தமிழகம் மதுக்கடைகளை திறக்காவிட்டால், கர்நாடக மற்றும் ஆந்திர மதுபானங்கள் தாராளமாக கள்ளச்சந்தையில் இங்கே ஊடுறுவ ஆரம்பித்துவிடும்.
இப்படித்தான் மது விற்பனை என்ற விவகாரம் பல்வேறு மாநிலங்களுடன் பின்னி கட்டப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் மதுவை ஒழிக்க என்னதான் வழி என்று கேட்கலாம்.
முதலில், மாநில அரசுகள் வருவாய்க்காக பெரிய அளவில் மதுவிற்பனையை நம்பியிருக்கும் நிலையில ஒரே நாளில், ஒரே கையெழுத்தில்.. என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிகளுக்கும் இது நன்றாகவே தெரியும். அதனால்தான அவர்கள் ஒரே நாளில் மது ஒழிப்பு என்றெலாம் கம்பு சுற்ற மாட்டார்கள். மதுபான ஆலைகள் அவர்கள் நடத்துவதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.
தமிழகத்தையே எடுத்துககொள்வோம். ஒரே நாளில் மதுஒழிப்பு என்றால், வருடத்திற்கு 32 ஆயிரம் கோடிக்கு மாற்று நிதி ஆதாரங்களை தேடவேண்டும். அது அவ்வளவு சுலபமான காரியமல்ல,
அப்போது என்னதான் வழி? முதலில் மது ஒழிப்பு இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதால், மதுவை படிப்படியாக குறைக்கும் முயற்சியில் இறங்கலாம். அது நிறையவே சாத்தியம்.
சொல்லப்போனால் பூரண மதுவிலக்கு என்று வீணாய் குரல் கொடுத்து இல்லாத ஊருக்கு வழிதேடுவதை விட்டுவிட்டு, பாதிக்கு பாதி என்ன முடிந்தால் 90 சதவீதம்வரைகூட  மதுவை மக்கள் மத்தியிலிருந்து அகற்றலாம்.. அதற்கான வழிகளில் இறங்குவதும் அதைப்பற்றி பேசுவதும்தான் உருப்படியான காரியமாக இருக்கும்.
மது விற்பனை மற்றும் நுகர்வு விஷயத்தில் சீரமைப்பு நடவடிக்கைகளை படிப்படியாக கடுமையாக்கினால், போகப்போக மதுவிற்பனை நிச்சயம் குறையும். அதேவேளையில், படிப்படியாக, மதுவருவாய்க்கு மாற்று நிதி ஆதாரங்களையும் மெதுவாக உருவாக்கிக் கொள்ளலாம். இதைவிட்டுட்டு, ஒரே நேரத்தில் ஒழிப்பு என்று பேசுவது, நடைமுறை சாத்தியமே இல்லாததது.
உண்மையிலேயே மதுவை ஒழிக்க விரும்பும் போராளிகள், மதுவிற்பனையில் நடக்கும் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு எதிராக உறுதியோடு போராட வேண்டும் அதற்கு முதலில் மதுவிற்பனையை சீர்படுத்தவேண்டும்.
டாஸ்மாக் சில்லறை மதுவிற்பனையை பில் போட்டே நடத்தவேண்டும். டாஸ்மாக் கடைதிறப்பு நேரத்திற்கு அப்பால் கள்ளச்சந்தையில் மதுபானகூடங்களில் மதுபானம் விற்பதை ஒடுக்கவேண்டும். இரவு பத்து மணிக்கு தொடங்கி மறுநாள் மதியம் பனிரெண்டுமணிவரை மதுபானங்கள் கள்ளச்சந்தையில் சர்வசாதாரணமாக விற்கப்படுவது ஊரறிந்த ரகசியம். இதில் அனைத்துகட்சியினரும் கூட்டு..இதனை மது ஒழிப்பு போராளிகள் தொடர்ந்து அம்பலப்படுத்த முற்பட்டாலே
மதுபானம் அருந்தும் வயது வராதவர்களுக்கு சட்டவிரோதமாக டாஸ்மாக் கடைகளில் சர்வ சாதாரணமாக மதுவிற்பனை செய்யப்படுவதை ஒழிக்கவேண்டும். அப்படி சட்டவிரோத விற்பனையில் ஈடுபடும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள்மேல் துறை நடவடிக்கைக்கு பதிலாக குற்றத்திற்கு உடந்தை என்ற வகையில் கிரிமினல் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்..
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அபராதம் என்பதற்கு பதிலாக கைது என, கடுமையான நிலையை கொண்டுவரலாம். இதைச்செய்தாலே பாதிப்பேர் நடைமுறை சிக்கலுக்கு பயந்து மதுபக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள்.
மது அருந்தியவர்களை பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தில் அனுமதிக்கவேகூடாது. இப்படிச்செய்தால் குடித்துவிட்டு பேருந்துகளிலும் ரயில்களிலும் மற்றவர்களை பற்றி கவலையப்படாமல் துர்நாற்றத்துடன் பயணிக்கும் போதைபார்ட்டிகளின் தொல்லை ஒழியும். குடித்தால் ஊர் போய் சேரமுடியாது என்ற நிலைவரவேண்டும்.
இதேபோல தெருவோரம் மற்றும் பொதுவிடங்களிலி சகட்டு மேனிக்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாட்டில் திறக்கும் கும்பல்களை அலறியடித்து ஓடவிட ஆளில்லா விமானங்கள் என துரோன்கள் மூலம் கண்காணிக்கலாம்..
மொத்தத்தில் ஒருத்தருக்கு,  ‘’ ஒருத்தர் சுதந்திரமாக மது அருந்தலாம். ஆனால் அருந்திய பின்னர் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சட்டத்தின் பிடியின் சிக்கி சமூகத்தில் அவமானப்பட்டே தீரவேண்டும் என்ற நிலையை உருவாகவேண்டும்..
அப்புறம் முக்கியமான விஷயம் , குடிகாரர்கள் உருவாகாமல் இருப்பது எல்லாவற்றையும் அவர்களின் குடும்பத்தாரிடம்தான இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆரம்பத்திலேயே கடும் எதிர்ப்பை காட்டினார்களேயானால் மேட்டர் ஓவர்..
 
ஏழுமலை வெங்கடேசன்..