சென்னை; பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்எக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணா செய்தனர். சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார் என்றும், ஸ்டாலின் ஆலோசனைப்படி சபாநாயகர் செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டினார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் முடிவு எடுக்காததை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அவை யில் கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு, அவையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர், சட்டமன்ற விதிப்படி, சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே உண்டு. துணைத்தலைவர் பதவி கிடையாது என கூறினார்.
இந்த நிலையில், அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், சபாநாயகர் நேற்று வரை சரியான முடிவு எடுக்காமல், இன்று எங்களது கருத்துக்களை நியாயமாக தெரிவித்தும், அதற்கு முறையான பதில் கூறவில்லை. சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார். சட்டமன்றம் வேறு, கட்சி வேறு என்றவர், திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை பெற்று சபாநாயகர் செயல்படுவதாக கருதுகிறோம் என்றார்.
மேலும், திமுக அரசுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை கையில் எடுத்துள்ளது என்றும் விமர்சித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையம் அமைந்ததே நாங்கள்தான் என்றவர், திமுகவின் பீ-டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்றார்.
அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின், கொள்ளைப்புறம் மூலமா பழிவாங்குகிறார் என்று குற்றம்சாட்டியதுடன், திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித் திட்டங்கள் அம்பலமாகி உள்ளன என்றும் தெரிவித்தார்.