மாட்ரிட்: 1918ம் ஆண்டு பரவிய உயிர்கொல்லியான ஸ்பானிஷ் ப்ளூ என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்மணி இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் சாதனை என்பது நோய் நொடி இல்லாமல் வாழ்வது என்று பலர் வாழ்த்த கேட்டிருப்போம்… அல்லது வாழ்த்தியிருப்போம். நோய் நொடிகளை கடந்து சந்தோசமாக வாழ்வதே ஒரு மிகப்பெரிய சாதனைதான் என்பதை ஸ்பெயினை சேர்ந்த 107 வயது மூதாட்டி நிரூபித்துள்ளார்.
1913ம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்தவர் ஏனா டெல் வெல்லா என்ற பெண். 5 வயது இருக்கும் போது முதலாம் உலகப்போர் உலகை சூழ்ந்திருந்த அதே வேலையில் ஸ்பானிஷ் புளூ என்ற உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவியது.
1918-1920 வரை இருந்த இந்த கொடூர நோய்க்கு உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிமானோர் பலியாகினர். இந்த நோய் ஏனா டெல் வெல்லாவையும் விட்டுவைக்கவில்லை. 5 வயதில் பாதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்தார்.
ஸ்பானிஷ் ப்ளூ என்பது கொரோனாவை விட கொடிய நோய். இந்த நோய் உலகை விட்டு சென்று கிட்டத்தட்ட 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால், ஏனா தன் சிறுவயதில் எவ்வாறு ஸ்பானிஷ் ப்ளூவுடன் போராடி வென்று வாழ்க்கையில் வெற்றிபெற்றாரோ, அதேபோல இப்போது தள்ளாத வயதிலும் கொரோனாவுடன் போராடி வென்றுள்ளார்.
107 வயதாகும் ஏனா டெல் வெல்லா கடந்த சில தினங்களுக்கும் முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஸ்பெயின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பூரண குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.
பொதுவாக வயதானவர்களை கொரோனா தாக்கினால் உயிர்பிழைக்க வைப்பது கடினம் என்ற கூற்று உலாவி வருகிறது. ஆனால், தன்னம்பிக்கை, மன உறுதி மட்டுமே இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதை இந்த மூதாட்டி உணர்த்தி உள்ளார்.