சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை வட தமிழ் உள் மாவட்டங்களில் தீவிரமாக உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 30 ஆம் தேதி நாடெங்கும் அதிகளவு மழை பொழிவை வழங்கும் தென் மேற்கு பருவமழை, கேரளாவில் தொடங்கியது. இதனால், கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம்,

”தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது தென்தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், வருகிற 5-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சீபுரம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகிற 5-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது ”

எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,

”பலத்த காற்று வீசும் என்பதால், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், தெற்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வஙகக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி, லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்”

என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.