டெல்லி ரயில்நிலையத்தை புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் கோடி: மத்திய அரசு திட்டம்

Must read

டெல்லி:

டெல்லி ரயில்நிலையத்தை புதுப்பிக்க பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி ரயில்நிலையம் எப்போதும்  பரபரப்பாக காணப்படும் இடமாகும். தினமும் 5 லட்சம் பயணிகள் வந்துசெல்லும் இந்த ரயில்நிலையத்தை உலகத்தரத்தில் புதுப்பிக்க ரயில்வே அமைச்சகம்  திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரிய ரயில்வே அமைச்சகத்திடம் இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தெளிவான வரைபடங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக  தனிதனியான கட்டடங்கள் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக மின்தூக்கிகள், தானே நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் தரும் இயந்திரங்கள் நிறைய பொருத்தப்பட உள்ளன. இவற்றைத்தவிர பயணிகளுக்கு கழிப்பிடங்கள், ஓய்வு அறைகள், பொருள்களை பாதுகாக்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகள் உலகத்தரத்தில் அமைக்கவிருப்பதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

முதல் தளத்தில் பயணிகள் ஓய்வெடுக்கவும், இரண்டாவது தளம் அலுவலகப் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் 300க்கும் அதிகமாக ரயில்கள் வந்துசெல்லும் அஜ்மீரி கேட் பகுதியில் பல மாடிகளைக் கொண்ட மால்கள் அமைக்கப்பட உள்ளன.

ரயில்வே அமைச்சகம் நாடுமுழுவதும் இதுபோன்று 23 ரயில் முனையங்களை புதுப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article