சென்னை:  சென்னையில் இயக்கப்பட்டு வரும் 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி (12 CAR RAKE) ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  இதன்மூலம் தினசரி 4லட்சம் கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதன்மூலம் தினசரி பல லட்சம் பேர் புறநகர் பகுதிகளில் இருந்து பணி நிமித்தம் உள்பட பல்வேறு வகைகளுக்கு சென்னை வந்து செல்கின்றனர். இந்த ரயில்களில் பெரும்பாலும் 9 பெட்டிகள் இணைத்தே இயக்கப்பட்டு வந்தது. இதனால், ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் ரயிலில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடத்து, முதல்கட்டமாக சில மார்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் பெட்டிகளை 12ஆக உயர்த்தி இருப்பதாக  அறிவித்து உள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுவரை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் கும்மிடிபூண்டி / சூலூருபேட்டை வழித்தடங்களில் பயன்பாட்டில் இருந்த அனைத்து 9 பெட்டி புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக கீழ்க்கண்ட வழித்தடங்களில் ஓடும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் இப்போது 12 பெட்டி ரயில்களாக இயக்கப்படுகின்றன:

• சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பிரிவு,
• சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் பிரிவு மற்றும்
• சென்னை சென்ட்ரல் – கும்மிடிபூண்டி / சூலூருபேட்டை பிரிவு.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தினசரி 12 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதால், 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு இடவசதி கிடைக்கும் (21% கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும்). இதனால் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் நெரிசல் குறைவதோடு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்ள வழிவகுக்கும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.