சென்னை: தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே 32 சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. அதில், நெல்லைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து காரைக்குடி வழியாக திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு எளிதான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக கூடுதலாக 32 சிறப்பு சேவைகளை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 11 வழித்தடங்களில் 56 சிறப்பு ரெயில் சேவைகளை இயக்க உள்ளது. ஏற்கனவே மொத்தம் 179 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எண் 06021 தாம்பரம் – திருநெல்வேலி சந்திப்பு விழா சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடையும்.
எண் 06022 திருநெல்வேலி சந்திப்பு – சென்னை எழும்பூர் திருவிழா சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும். திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் தாம்பரம் மற்றும் மாம்பலத்திலும் நின்று செல்லும். முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு திறக்கப்படும்.
22ம் தேதி செகந்திராபாதிலிருந்து சென்னை வழியாக தஞ்சைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது
அதுபோல இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் 211 சிறப்பு ரெயில்களை (சென்று,வர) 2561 டிரிப்புகளை இயக்குகிறது. இந்த சிறப்பு ரயில்கள் தர்பங்கா, அசம்கர், சகர்சா, பகல்பூர், முசாபர்பூர், பிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.