புவனேஸ்வரம்: வங்கக் கடலில் சித்ராங் (SITRANG ) புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரித்து உள்ளது. நாளை (20ஆம் தேதி) வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மத்திய வங்க கடலில் வலுவடைந்து புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு #SITRANG என தாய்லாந்து பெயரிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியானது புயல் சின்னமாக உருமாறும் வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறும். இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்கு பகுதியில் நிலைகொள்ளும். தொடர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும்,  இந்த சித்ராங் புயல் ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், புயல் கரையில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு SITRANG (சித்ராங்) புயல் என பெயரிட்டுள்ளது.

இந்த புயல் தொடர்பாக பல்வேறு கணிப்புகள் இருந்தபோதிலும், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை அக்டோபர் 23 மற்றும் 27 க்கு இடையில் மிகக் கனமழை மற்றும் பலத்த காற்றைக் காணக்கூடும் என்பது நிச்சயம். அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் இந்திய கடற்கரையை நோக்கி பயணிக்கும். தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், தற்போதைக்கு அதன் பாதை இதுவரை கணிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிய பிறகே இதுபற்றி மேலும் தகவல்களை கணிக்க முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, புயல் சின்னம் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், ஒடிசா மாநில அரசு, அதன் ஊழியர்களுக்கு அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை அளித்த விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.