சென்னை : சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில் சேவை பெரும் பங்கு வகிக்கிறது. இதை மேலும் மேம்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – வேளச்சேரி ஆகிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் பெட்டிகளுடன் ஏசி பெட்டிகளையும் இணைப்பது குறித்து திட்டமிட்டு வருகிறத.
தற்போது நாள் ஒன்றும், 630-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன இதன்மூலம் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணம் செய்கின்றனர். இந்த புறநகர் மின்சார ரயிலில், ஏசி பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று, ஏசி பெட்டிகளை இணைப்பது குறித்து தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் ஏ.சி.பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு மின்சார ரயில்களிலும் 2 முதல் 3 ஏ.சி. பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நடத்துவதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் அடுத்த 6 மாதத்திற்குள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.