சென்னை: பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளித்துவிடக்கூடாது
  • பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது அவசியம்.
  • கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்
  • சமூக ஊடகங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்

மாநாட்டின் முதல் நாளான இன்று காலை 09.30 மணி முதல் 11.45 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும், நண்பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும், மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு, சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அனைத்து அமைச்சர்களும் தலைமைச் செயலாளர் உள்பட துறை சார்ந்த முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில்,  அரசின் முத்திரைப் பதிக்கும் திட்டங்கள், சட்டம் & ஒழுங்கு, வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சிறந்த ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளது.

தலைமைச்செயலகத்தில் இன்று தொடங்கி இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். முதல்கட்டமாக,  மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியுள்ளது.

இதில் உரையாற்றி முதலமைச்சர் ஸ்டாலின்,  “தொடர்ச்சியாக உங்களை சந்தித்து வருகிறேன். அரசுக்கு ஆலோசனைகளை எவ்வித தயக்கமுமின்றி, மக்கள் நலனை மையமாகக் கொண்டு வழங்க வேண்டும். இந்த அமர்வில் சட்டம் & ஒழுங்கு பராமரிப்பு குறித்து விவாதிக்கவுள்ளோம். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவதே முதல் இலக்கு. பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது அவசியம். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளித்துவிடக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் உள்நோக்கோடு அத்தகைய சக்திகள் செயல்பட வாய்ப்புள்ளது. தீவிரமாக கண்காணித்து அவற்றை தடுக்க வேண்டும். சமூக ஊடகங்கள் கணிகாணிக்கப்பட வேண்டும்.

கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.  பொய்ச்செய்தி களை பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்” 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்க கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை பெற்றுத்தருவதில் மும்முரம் காட்ட வேண்டும்.  பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலகத்திற்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்க வேண்டும்

சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. அதனைக் குறைப்பதற்காக சிறப்புச் செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.  பிரத்தியேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும்” என்றார்.