சென்னை: சென்னையில், வரும் 5ந்தேதி முதல் புறநகர் ரயில்சேவையில், சில சேவைகள் மட்டும் இயங்கும் என்றும், இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்காக மட்டுமே ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், அரசு ஊழியர்கள், அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும், சாதாரண பொதுமக்கள் ரயிலில் செல்ல அனுமதியில்லை என்றும் தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
சென்னையில், மெட்ரோ ரயில் உள்பட சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், புறநகர் ரயில்சேவை இன்னும் இயக்கப்படவில்லை. ஆனால், மாநில அரசு கோரிக்கை விடுத்தால், புறநகர் ரயில்சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இந்த நிலையில், திங்கட்கிழமை (5ந்தேதி) முதல் சென்னையில் மூன்று தடங்களில் புறநகர் ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகஅரசின் வேண்டுகோளுக்கு இணங்கா, அரசால் சான்றளிக்கப்படும் இன்றியமையாச் சேவைப் பணியாளர்களின் வசதிக்காகத் திருமால்பூர் – செங்கல்பட்டு – சென்னைக் கடற்கரை, காட்பாடி – அரக்கோணம் – சென்னை சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி – சென்னைக் கடற்கரை ஆகிய தடங்களில் புறநகர் ரயில்களை இயக்கப்பட உள்ளது.
இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்குச் சான்றளிக்கும் அதிகாரியாகப் பொதுத்துறைத் துணைச் செயலாளர் சாந்தியைத் தமிழக அரசு நியமித்துள்ளது.
சான்று பெற்ற இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்கு மட்டும் பயணச்சீட்டுகள் வழங்கப்படும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காட்டி பயணிக்கலாம். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.