டெல்லி: மதுரை விமான நிலைய கோரிக்கைகள் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுடன் தென்மாவட்ட எம்பிக்கள் சந்தித்து  மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், துறைவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் உரியதே என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது.  இந்த நிலையில்,மத்திய பட்ஜெட் 2024ல்  சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு ரூ.2,357 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  இருப்பினும், ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களுக்கு, உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டமானது 2023-24 திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ. 33 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் ரூ.57 கோடி அதிக ஒதுக்கீடு பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், கார்த்திக் சிதம்பரம், நவாஸ்கனி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர்  மதுரை விமான நிலையம் தொடர்பாக சந்தித்தனர்.

இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில்,   மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மதுரையிலிருந்து சிங்கபூருக்கு இயக்கப்படும் விமானத்தின் நாட்களை குறைக்க கூடாது என்றும் மதுரையிலிருந்து கோலாலம்பூருக்கு விமானம் இயக்கப்பட வேண்டும் எனவும் மதுரையிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து தென் மாவட்ட எம்பிக்கள் வலியுறுத்தினர்.

மதுரை விமான நிலைய ஊழியர் எண்ணிக்கை, உள்துறை அமைச்சகத்தால் இரண்டு ஷிப்ட் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும், 3 ஷிப்ட் சர்வதேச விமான போக்குவரத்துக்குமாக தீர்மானிக்கப்பட்ட அளவான 305 ஐ விட மிகக் குறைவாக 214 ஆக இருந்து வருகிறது. இதனால் 24 மணி நேர சர்வதேச விமான சேவையை தருவதில் மிகப்பெரும் தடங்கல்கள் இருந்து வருகின்றன.

இதற்கிடையில் புதிய மனித வளத் தேவை குறித்த ஆய்வு நடத்தப்பட்டு 3 ஷிப்ட் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும், 3 ஷிப்ட் சர்வதேச விமான போக்குவரத்துக்குமாக 481 ஊழியர் எண்ணிக்கையானது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஊழியர் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.

மதுரை ஓர் முக்கியமான நகரம் ஆகும். அதன் விமான நிலைய மேம்பாடு என்பது ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படக்கூடியதாக இருந்து வருகிறது. ஆகவே உடனடியாக புதிய மனிதவள ஆய்வின் அடிப்படையில் ஊழியர் எண்ணிக்கையை நிர்ணயித்து பணி அமர்த்தவும் வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கைகள் மீது உரிய பரிசீலனை செய்து நல்ல முடிவெடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.