சியோல்:
ஊழல் வழக்கில் தென் கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேவுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

தென்கொரியாவில் பார்க் சுங்-ஹீ-யின் மகள் பார்க் கியூன் ஹே 2013-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று தென்கொரியா அதிபராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற குறுகிய காலத்தில் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கினார்.

இவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்வதாகவும், ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடை பெற்றா£க புகார் எழுந்தது. இதையடுத்து சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அதிபர் பார்க் கியூன் ஹே பதவி விலக வலியுறுத்தி 13 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணி, ஆர்ப்பாட்டம் சியோலில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். விசாரணை முடிவில், பதவி நீக்கம் செய்தது செல்லும் என்றும், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், பார்க் கியூன் ஹே பதவியை முறைகேடாக பயன்படுத்தி 2.10 கோடி டாலர் பணப் பலன் அடைந்தது விசாரணை மூலம் நிரூபணமானது. இவ்வழக்கில் இன்று நீதிபதி கிம் சே-யூன் தீர்ப்பளித்தார். பார்க் கியூன் ஹே-வுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 லட்சம் வோன் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்த பார்க் கியூன் ஹே தீர்ப்பின் போதும் நேரில் ஆஜராகவில்லை. தென்கொரியா நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக இந்த தீர்ப்பு டிவி.க்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.