நாய்க்கறி விற்பனைக்கு தடை விதித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாய் வளர்ப்பாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கவலையடைந்துள்ளனர்.
உணவுப்பழக்கம் என்பது உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் வெவ்வேறாக உள்ளது.
அந்தந்த நாடு மற்றும் பகுதியில் உள்ள கலாச்சாரம் மற்றும் சீதோஷன நிலைக்கு ஏற்ப இந்த உணவுப்பழக்கம் வித்தியாசப்படுகிறது.
அந்த வகையில் தென் கொரியாவில் கோடைகால நோய்களைக் கட்டுப்படுத்த நாய்க்கறி உண்பது அவர்கள் கலாச்சாரத்துடன் கூடிய ஒன்றாக உள்ளது.
பன்நெடுங்காலமாக அந்நாட்டு மக்கள் நாய்க்கறியை சாப்பிட்டு வரும் நிலையில் கடந்த பலபத்தாண்டுகளாக நாய்க்கறி உண்பதற்கு எதிரான பிரச்சாரம் அதிகரித்து வருகிறது.
இதனால் நாய்க்கறி உண்பது வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களில் 15 சதவீதம் பேர் நாய்க்கறி உண்பதாக கூறியிருந்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 8 சதவீதமாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாய்க்கறியை தடைசெய்ய அந்நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நாய்க்கறிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவால் அந்நாட்டில் உள்ள 1150க்கும் மேற்பட்ட நாய் வளர்ப்பு மையங்கள் மற்றும் 200க்கும் அதிகமான நாய்க்கறி பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் 1600க்கும் அதிகமான நாய்க்கறி விற்பனை செய்யும் ஹோட்டல்கள் கலக்கமுற்றுள்ளன.
நாய்க்கறி விற்பனைக்குத் தடைவிதித்துள்ள தென்கொரிய அரசு இதனை முழுமையாக ஒழிக்க மூன்றாண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது.
தென்கொரிய அரசின் இந்த முடிவால் நாய்கறி உண்பதை தங்களது கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்றாக கருதிவரும் மூத்த குடிமக்கள் பலரும் மிகுந்த வேதனை அடைந்துள்ளதோடு சாப்பாடு என்பது அவரவர் விருப்பம் என்றும் அதில் யாரும் தலையிடக்கூடாது என்றும் கூறிவருகின்றனர்.