கேப்டவுன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆட்டம் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. ஜோ டென்லி மட்டுமே அதிகபட்சமாக 87 ரன்களை எடுத்தார். வேறு யாரும் அந்த அணியில் அரைசதம் அடிக்கவில்லை.

ஜேசன் ராய் 32 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 40 ரன்களும் அடித்தனர். தென்னாப்பிரிக்க அணியில் ஷாம்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், தொடக்க வீரர் டி காக் 107 ரன்கள் அடிக்க, டெம்பா பவுமா 98 ரன்களும் எடுத்தனர்.

வான் டூஸென் 38 ரன்களை அடித்தார். முடிவில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 47.4 ஓவர்களில் இலக்கை எட்டியது தென்னாப்பிரிக்க அணி. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.