ஜொகன்னஸ்பர்க்: வீரர்களின் பயிற்சி மற்றும் ஆட்டம் தொடர்பான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் திட்டங்களுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இதனையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக, வரும் வியாழக்கிழமை கூடவுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

மேலும், இந்தச் சூழலில், தனது நாட்டு ஆண்கள் & பெண்கள் கிரிக்கெட் அணிகளை மறுபடியும் களத்தில் இறங்கும் வகையில் தயார்செய்வதே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

பயிற்சிபெற மற்றும் விளையாடுவதற்கான அனுமதி அரசிடமிருந்து கிடைக்காத காரணத்தால், 3டிசி கண்காட்சி நிகழ்வை ஒத்திவைக்க வேண்டிய நெருக்கடி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்டது.

கொரோனாவைரஸ் பரவல் தீவிரமாக இருந்த சென்சுரியனின் சூப்பர்ஸ்போர்ட்  பூங்காவில் இந்தப் போட்டிகள் நடைபெறவிருந்த காரணத்தால், விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அனுமதி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு தேவையாக இருந்தது.

கடந்த மார்ச் 15ம் தேதி முதலே, தென்னாப்பிரிக்க மண்ணில் எந்தக் கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. எனவே, இத்தனை மாதகாலம் போதுமான பயிற்சிகள் இல்லாத தேசிய அணியின் வீரர்-வீராங்கனைகளை சரியான முறையில் தயார் செய்வதே கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய முதல் நோக்கம் என்று கூறப்படுகிறது.