லண்டன்: இலங்கை – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், இது காலம் கடந்த வெற்றி!
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி ஆடிய இலங்கை அணி, பேட்டிங்கில் ஏனோதானோவென்று செயல்பட்டது. கேப்டன் கருணரத்னே கோல்டன் டக் ஆனார். குசேல் பெரேராவும், ஃபெர்னாண்டோவும் மட்டுமே தலா 30 ரன்களை அடித்தனர். இதர பேட்ஸ்மேன்கள் யாரும் 30 ரன்களைக்கூட தொடவில்லை.
தென்னாப்பிரிக்க அணி 20 எக்ஸ்ட்ராக்களைப் போட்டுக்கொடுத்து இலங்கை அணி 200 ரன்களை எட்ட உதவியது. தென்னாப்பிரிக்க அணியில் கிரிஸ் மோரிஸ் மற்றும் பிரிட்டோரியஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 204 என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா, இதுவரையில்லாத அளவிற்கு சிறப்பாக ஆடியது. ஆம்லா 80 ரன்களும், டூ ப்ளெஸ்சிஸ் 96 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது தென்னாப்பிரிக்கா.
வெல்ல வேண்டிய போட்டிகளிலெல்லாம் காரணமே தெரியாமல் தோற்றுவிட்டு, ‘கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்’ என்ற வகையில், யாருக்கும் புண்ணியமில்லாமல் கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. கடைசியாக, ஆஸ்திரேலியாவுடன் நடக்கவுள்ள போட்டியில் வென்றாலும்கூட, அதனால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தை வென்ற இலங்கை அணி, தென்னாப்பிரிக்க அணியிடம் தோற்று தனது அரையிறுதி வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது.