திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர். முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர்  கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது முருகன் கோவில். இந்த கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர்,  செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.  கடல் அலைகளால் இத்தலம் எப்போதும் அலைக்கப்படுவதால் ‘அலைவாய்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள முருகன் ‘செந்தில் ஆண்டவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்தத் தலத்தில் முருகன், சூரபத்மனை வதம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக  ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளில், சூரசம்ஹாரமும், அடுத்த நாள் திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி, நடப்பாண்டு  கந்த சஷ்டி விழா  22ந்தேதி அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையட்டி, திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் நோன்பு இருந்து முருகனை தரிசித்து வருகின்றனர். மேலும் தினசரி பல ஆயிரம் பக்தர்கள் செந்தூர் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

கந்தசஷ்டி விழாவின்  (6வது நாள் திருவிழா) முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்  இன்று (அக்.27 ) மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது. இன்று  மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

இதையொட்டி, இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் கோவிலுக்கும் வரும் வகையில், சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. லட்சகணக்கான பக்தர்கள் குழுமியுள்ள நிலையில், மேலும் பல்லாயிரம் பக்தர்கள் இன்று மாலை அங்கு திரளுவார்கள் என எதிர்பார்ப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது

சூரசம்ஹாரத்தை தொடர்ந்து,  கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

7-ம் திருவிழாவான 28-ந் தேதி (நாளை = செவ்வாய்க்கிழமை) மாலை சுவாமி குமரவிடங்க பெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் பகுதியில் நாளை முதல் இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்….

திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா ..!