ஒரே ஒரு படை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காது – ஏன் தெரியுமா?
முருகனின் அறுபடை வீடுகளில் ஒரு படைவீட்டில் சூரசம்ஹாரம் நடக்காது. அது எங்கு மற்றும் ஏன் என்பதை இங்கு காண்போம்
முருகனுக்கு ஐப்பசி மாதம் ஆறு நாட்கள் கொண்டாடப்படு கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். இது தீபாவளி கொண்டாட்டத்துக்குப் பிறகு ஆறு நாட்கள் சஷ்டி திதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் மேற்கொள்வோர் பெரும்பாலும் முருகன் கோவிலில் தங்கி விரதம் அனுசரிப்பது வழக்கமாகும்.
விரத நிறைவு நாளன்று பக்தர்கள் உணவு மற்றும் நீர் எடுத்துக் கொள்ளாமல் அன்று மாலை நிகழும் சூர சம்ஹார நிகழ்வைக் கண்டு களிப்பார்கள், இதைக் காணும் பக்தர்கள் சூரனை அழிப்பது போல் தங்கள் துன்பங்களையும் முருகன் அழிப்பார் என மன உறுதி அடைவார்கள். அடுத்த நாள் முருகப் பெருமான் தெய்வானை திருமணம் ஆகும்.
இந்த சூரசம்ஹார விழாவை ஒரு படை வீட்டில் கொண்டாடப்படுவதில்லை. அது திருத்தணி தலமாகும். திருத்தணி அறுபடை வீட்டில் ஐந்தாம் படை வீடு ஆகும். இங்கு வள்ளியைத் திருமணம் செய்துக் கொண்டு அமைதியாக முருகன் ஆட்சி அளிக்கிறார். இந்த படை வீட்டில் சினம் தணிந்து முருகன் காட்சி அளிப்பதால் திருத்தணி எனப் பெயர் பெற்றுள்ளது. இதனால் இங்கு சூரசம்ஹாரம் நடப்பது இல்லை.
திருத்தணியில் கந்த சஷ்டி விழா மட்டுமே நடைபெறுகிறது. அன்று இக்கோவிலில் வள்ளித் திருமண விழா நடைபெறுகிறது. வள்ளித் திருமணத்தைக் காணும் மணமாகாதோருக்குத் திருமணம் கை கூடும் என நம்பிக்கை உள்ளது.