சென்னை

கொரோனா நோய்த்தொற்றுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

நாளை (மே 24) முதல் தமிழகத்தில் ஒரு வாரத்திற்குத் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.  இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.  ஊரடங்கு காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியர்களுடன் விவாதித்துள்ளார்.  அதன் பிறகு அவர் கூட்ட முடிவில் உரை நடத்தி உள்ளார்/

மு க ஸ்டாலின் தனது உரையில்  ”நாளை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழ வகைகள், பால், குடிநீர் போன்றவற்றை வழங்கச் சிறப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்குப் பால், குடிநீர் வினியோகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியது ஆட்சியர்கள் கடமை ஆகும்.

அதைப் போல் வீதிகளில் வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறிகள் விற்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறை மற்றும் உள்ளாட்சித் துறை கண்காணிக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போடும் பணிகளை எவ்வித தொய்வின்றி மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை வழங்க வேண்டும்.  அரசால் அனுமதிக்கப்பட்ட பணிகள் தவிர்த்து, ஊரடங்கு விதிகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும்.

சமுகத்தின் முக்கிய செயல்பாடு என்பது முழு ஊரடங்காகும். இந்த முழு ஊரடங்கு கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே போடப்பட்டுள்ளது. எனவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக கொரோனா நோய்த்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி போடுவதில், சென்னை, கோவையில் விழிப்புணர்வு அதிகம் இருப்பதால் 30 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதே வேளையில் , திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவாரூரில் 5 சதவீதம் கூட எட்டவில்லை. கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.