பொன்னமராவதியில், ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில் உள்ள கலைஞர் திடலில், தெற்கு ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று ( 04.04.2018) இரவு நடைபெற்றது.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க கழக கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.ராசா கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.ரகுபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
கூட்டம் நிறைவுபெற்ற பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
“காவிரி விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசு ‘நாங்கள் ஸ்கீம் என்றால் என்ன என்று கேட்டு மனு போடுகிறோம். நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று மனு போடுங்கள்’ என்று பேசிவைத்துக்கொண்டு, களவாணித்தனம் செய்கின்றன. நீதிமன்றம் 6 வாரம் அவகாசம் கொடுத்தது. ஆனால், 5 வாரங்களை விட்டுவிட்டு 6-வது வாரத்தில் இந்தத் தீர்ப்பில் சந்தேகம் இருக்கிறது என்று சொல்வது மிகப்பெரிய அநியாயம். இதைக் கேட்க மாநில அரசுக்கு துப்பு இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க காவிரிக்காக ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போடவில்லை’ என்று பேசுகிறார்.
முதன் முதலாக சட்டமன்றத்தில் காவிரிக்கு நடுவர் மன்றம் வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான். 11 வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர்தான் ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை. கருணாநிதி போட்ட தீர்மானத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம் என்று எம்.ஜி.ஆர் சொல்லவில்லை. 91 முதல் 96 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, காவிரி பற்றி ஜெயலலிதா பேசவே இல்லை.
நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்று சொன்னது எடப்பாடி பழனிச்சாமி அரசு. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி பேரும் நீட் வேண்டாம் என்று குரல் கொடுத்தோம். அது குறித்த தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து விட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் குடியரசு தலைவர் மாளிகையில் அப்படி தீர்மானம் வரவில்லை என்கிறார்கள்.
கார்கில் போரில் பாகிஸ்தானை வெற்றிகொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு ம்கள் நிதி அளித்தோம். நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் வேண்டும். காவிரி பிரச்சினை என்றால் யாரும் வரமாட்டார்கள். எதற்காக இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்ற கேள்வி வராதா? அந்த நாள் விரைவில் வரப்போகிறது” என்று பேசினார்.