சென்னை
காலியாக உள்ள 3 தமிழக மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலை நடத்தத் தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினராக இருந்த முகமது ஜான் மரணம் அடைந்தார். தவிர அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த 2 பேரும் மே 10ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
தற்போது 3 மாநிலங்களவை பதவிகள் காலியாக உள்ளது. முகமது ஜானின் பதவிக் காலம் 24.7.25, வைத்தியலிங்கத்தின் பதவிக்காலம் 29.6.22, கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 22.4.26 வரை உள்ளது. ஆகவே காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி உடனடியாக நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.
இந்த 3 தற்காலிக காலியிடங்களை தனித்தனி இடைத்தேர்தல் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தை தவிர மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 8 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
தற்போது கொரோனா தொற்றுக் காலம் என்பதால் மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்துச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இந்தியத் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டிருந்தது. மகாராஷ்டிர அரசு தற்போதைய சூழலில் தேர்தலுக்குத் தயாராக இல்லை எனப் பதில் அளித்துள்ளது. ஆனால் தமிழகம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இடைத்தேர்தல் நடத்தத் தயார் எனத் தேர்தல் ஆணையத்துக்குப் பதில் அனுப்பி உள்ளன.
இதையொட்டி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்துவதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 3 மாநிலங்களவை பதவிக்கான தேர்தலை நடத்தும் பட்சத்தில் திமுக தான் 3 இடங்களிலும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுகவுக்கு தற்போது 7 எம்பிக்கள் உள்ள நிலையில். இந்த 3 இடங்களையும் சேர்த்தால் 10 எம்பிக்களாக, திமுகவின் பலம் உயரும்.