டில்லி

பொழுதுபோக்கு தளங்களான நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றுக்கு விரைவில் தணிக்கை முறை அமல்படுத்த உள்ளது.

இந்தியாவில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்ட பிறகே திரையரங்குகளில் மட்டுமின்றி இணைய தளங்களிலும் வெளியிடப்படுகின்றன.   தற்போது பொழுது போக்கு தளங்கள் அதிகரித்துள்ளன.  இவற்றில் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்றவை பிரபலமாக உள்ளன.    இவை வெளிநாட்டை சேர்ந்தவையாக இருப்பினும் பல இந்திய மொழிகளில் தொடர்கள் வெளியாகி வருகின்றன.

இந்த தொடர்கள்  பற்றி பலமுறை புகார்கள் வந்துள்ளன.  குறிப்பாக இந்த தொடர்களில் ஆட்சேபகரமான காட்சிகள் மற்றும் வசனங்கள்,  மத உணர்வை கொச்சைப்படுத்தும் நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம் பெறுவதாக புகார்களில் கூறப்பட்டன.   குறிப்பாக நெட்பிளிக்சில் வெளியான சேக்ரட் கேம்ஸ் என்னும் தொடரில் முன்னாள் இந்தியப் பிரதமர் பற்றிய தவறான காட்சிகள் இருந்ததாக வழக்கு தொடரப்பட்டு பிறகு அது ரத்து செய்யப்பட்டது.

கடந்த மாதம் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றொரு நெட்பிளிக்ஸ் இணையத் தொடரில் இந்துக்களைக் கேவலமாக சித்தரிப்பதாகப்  புகார் அளித்திருந்தார்.    ஆனால் அது வழக்கு வரை செல்லுமா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.   பொதுவாக இத்தகைய புகார்கள் அனைத்திலும் இந்த இணையத் தொடர்கள் எவ்வித தணிக்கைக்கும் உட்படாததால் இந்த நிலை ஏற்படுவதாகக் கூறப்பட்டது.

இது குறித்து பொழுதுபோக்கு தளமான ஹாட்ஸ்டார் தணிக்கைக்கு உட்படத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.   ஆனால் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் உள்ளிட்ட தளங்கள் தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதிகள் வைத்துள்ளதாகவும் அதற்கு உட்பட்டு அனைத்து நிகழ்வுகளும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மூத்த அரசு அதிகாரி ஒருவர், “இந்த தளங்கள் தெரிவித்துள்ள சுய கட்டுப்பாட்டு விதிகள் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒன்று  போல கிடையாது.  எனவே இது சரியான முறை ஆகாது.  எனவே இந்த தளங்களில் வெளியாகும் அனைத்து நிகழ்வுகளும் தணிக்கைக்கு உட்பட வேண்டும்.   விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.