Sonu Sood to make biopic on badminton player PV Sindhu
இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக வில்லன் நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.
விளையாட்டை மையப்படுத்தும் சினிமா படங்களை எடுக்கும் ஆர்வம் இப்போது அதிகரித்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் வாழ்க்கையை படமாக்கும் சூழலும் அதிகரித்துள்ளது. குத்துச்சண்டை வீராங்கனைப் பற்றிய ’இறுதிச்சுற்று’ படம் தமிழ், இந்தியில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. பிறகு தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டும் ஹிட்டானது.
பிரியங்கா சோப்ரா, குத்துச்சண்டை வீராங்கனை ‘மேரிகோம்’ வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தார். சமீபத்தில் ஆமீர் கான் நடிப்பில் தங்கல் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதே போல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை, ’எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் படமானது. இப்போது சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையும் படமாகியுள்ளது.
இதற்கிடையே கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமைச் சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக சோனு சூட் தெரிவித்துள்ளார். இவர், அருந்ததி, ஒஸ்தி உட்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்தவர்.
‘படத்துக்கு சிந்து என்று டைட்டில் வைத்திருக்கிறேன். அவர் தொடர்பான பல விஷயங்களை கடந்த 8 மாதங்களாக சேகரித்து கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பதால் தயாரிக்கிறேன்’ என்று சோனு சூட் கூறியுள்ளார்.