David Warner masterclass helps Sunrisers Hyderabad subdue table toppers Kolkata Knight Riders

 

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 6-வது வெற்றியை நேற்று பதிவு செய்தது. வார்னரின் அதிரடி சதத்தால் அந்த அணி, 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

ஹைதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் காம்பீர் முதலில் ஹைதராபாத்தை பேட் செய்ய பணித்தார். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை பிறகு உணர்ந்திருப்பார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்சில், அதிரடி மன்னன் வார்னர் வாண வேடிக்கை நிகழ்த்த காம்பீர் அண்ட் கோ, ஆச்சரியத்தில் வாய்பிளந்துகொண்டே இருந்தது. முதல் ஓவரில் இருந்தே வார்னர் அதிரடி காட்ட, 43 பந்துகளில் தனது 3-வது ஐ.பி.எல். சதத்தை எடுத்தார். மீண்டும் சிக்சரும் பவுண்டரியுமாக அவர் தெறிக்க விட, அணியின் ஸ்கோர் 171 ஆக இருந்தபோது கேட்ச் ஆனார். அவர் 59 பந்துகளில் 10 பவுண்டரி, 8 சிகருடன் 126 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் 25 ரன்களில் 40 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. முன்னதாக தவான் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

 

பின்னர் ஆடிய கொல்கத்தா அணி, இந்த மலையளவு ஸ்கோரை எடுக்க நினைத்து தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தது. அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிக‌ட்சமாக ராபின் உத்தப்பா 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். மணிஷ் பாண்டே 39 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர்குமார், முஹமது சிராஜ், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.