டில்லி

டில்லி நகரில் காசு மாசு அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி சோனியா காந்தி ஜெய்ப்பூர் செல்கிறார்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போய்ஹு தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இங்கு காற்றின் தரக்குறியீடு 375 என மிக மோசமான நிலையில் இருப்பதால் வயதானவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாகச் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் டில்லியில் நிலவும் காற்று மாசுவால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, டில்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்ல உள்ளார்.

டில்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை ஜெய்ப்பூரிலேயே சோனியா காந்தி தங்கியிருப்பார் எனவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.  மேலும் மருத்துவர்கள் அறிவுறுத்தலை ஏற்றுச் சோனியா காந்தி ஜெய்ப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இங்குக் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க  கடும் பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சோனியா காந்தி ஜெய்ப்பூரில் தங்க இருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.