டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக அணி சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளின் ஐஎன்டிஐஏ (I.N.D.I.A) கூட்டணி சார்பில், மும்பையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், மூம்த காங். மூத்த தலைவர் சோனியாகாந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. ஏற்கனவே இந்த கூட்டணிகள் சார்பில் இரண்டுமுறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், 3வது ஆலோசனை கூட்டம் ஆகஸ்டு 31ந்தேதி, மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதில் செப்டம்பர் 1ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சோனியா பங்கேற்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்றும், குழுவின் சின்னமும் வெளியிடப்படும் என்றும் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.
கூட்டம் நடைபெறும் இடத்திற்கான ஏற்பாடுகளை உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியும், தலைவர்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை சரத் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும், விளம்பர வேலைகள் மற்றும் பிற வெளி அரங்க நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியும் மேற்கொள்கின்றன.
இதற்கிடையில் கூட்டணி கட்சிகளில் பங்கேற்றுள்ள பல மாநில கட்சிகளின் பல்வேறு தங்களது மாநிலங்களுக்கு ஏற்றவாறு, கொள்கைகளை உருவாக்க காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் நடைபெற உள்ள 3வது ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கொள்கை, பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு, பிரச்சார வியூகம், தேர்தல் அறிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து, மேலும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் எனவும் முடிவு செய்யப்படும் என்றும், குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்று வடிவமைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 26 கட்சிகளை சேர்ந்த 80 தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு தாவவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அலோக் ஷர்மா, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 4 முதல் 5 கட்சிகள் வெளியேற தயாராக இருக்கின்றன. அவை நிச்சயம் இந்தியா கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் அந்த கட்சிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று தெரிவித்தார்.
இதனால் ஐஎன்டிஐஏ கூட்டணியின் பலம் கூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.