டில்லி:

ஜனநாயகத்தின் கோவிலை மூடும் வகையிலும், ஏழைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசின் அராஜக போக்கை சோனியா காந்தி கண்டித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பணிக்குழு கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த சோனியாகாந்தி பேசுகையில், ‘‘ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த கால தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. குஜராத், இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு தான் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தின் கூட்டத்தை நடத்தாமல் தவிர்ப்பதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் எதிர்ப்புகளை தவிர்க்கலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம் ஏழைகளின் எதிர்காலத்தை பாஜக அரசு அழித்துவிட்டது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘ஜிஎஸ்டி முறையற்ற முறையிலும், அவசர கோலத்திலும் அமல்படுத்தப்படடுள்ளது. மோசமான முறையில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்டி.யை அமல்படுத்த நாடாளுமன்றத்தை மோடி நள்ளிரவில் கூட்டினார். ஆனால், தற்போது அதே நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான நம்பிக்கையை மோடி இழந்துவிட்டார்.

ஒரு ஆண்டு முடிந்துவிட்ட நிலையிலும் பணமதிப்பிழப்பு இதுவரை எதுவும் செய்துவிடவில்லை. இதனால் விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், இல்லத்தரசிகள், கூலித் தொழிலாளிகளுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. இதன் மூலம் ஏழைகளின் எதிர்காலம் அழிக்கப்பட்டுவிட்டது.

மேலும், நேரு, இந்திராகாந்தி போன்றவர்கள் இந்த நாட்டின் மேம்பாட்டிற்கு அளித்த பங்களிப்பை மறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது’’ என்று சோனியாகாந்தி குற்றம்சாட்டினார்.