ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல்- சோனியா காந்தி சாடல்

Must read

புதுடெல்லி:
க்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

டெல்லியில் நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆற்றிய தொடக்க உரையின் விவரம் பின்வருமாறு:-

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவது ஒரு தேசிய சவால் என்று இந்திய தேசிய காங்கிரஸ் எப்போதும் நம்புகிறது. அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். நாங்கள் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் முதல் எங்களுடைய ஒத்துழைப்பு கரங்களை நீட்டி வருகிறோம்.

எவ்வாறாயினும், கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டைக் கடுமையாகத் தாக்கியுள்ளது என்கிற உண்மையை நாம் மறுக்க முடியாது. நம்மைத் தயார் செய்துகொள்ள ஒரு வருடம் இருந்தபோதிலும், வருந்தத்தக்க வகையில், நாம் மீண்டும் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

குடும்பங்கள் சிதைந்து போகின்றன, உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்டுள்ளன, ஒட்டுமொத்த சேமிப்பும் சுகாதாரத்தில் செலவிடப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் கடுமையான பற்றாக்குறை பற்றிய செய்திகளைப் படிப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

கோவிட்-19 நோயிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசிக்கான பற்றாக்குறை மற்றும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட முக்கியமான உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறை பற்றியும் நாடு முழுவதிலும் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட கடினமான, சவாலான ஒரு தருணத்தில்தான் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாகிய நாம் மீண்டும் சந்திக்கிறோம்.

கடந்த வருடத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இந்த தொற்றுநோய்க்கு இழந்த பல ஆயிரம் குடும்பங்களுக்கு முதலில் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் வேதனை என்பது நம்முடைய வேதனையும் தான். கடுமையான அழுத்தங்கள் மற்றும் அபாயங்களை எதிர்கொண்டு தனித்துவமான சேவையை வழங்கிய முன் கள சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவ சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் நன்றியையும் ஆதரவையும் மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம்.

அண்மையில், காங்கிரஸ் கட்சியால் ஆளப்படும் மாநிலங்களின் முதல்வர்களுடனும், காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுடனும் தற்போதுள்ள கடினமான சூழ்நிலையைப் பற்றி விரிவாக விவாதித்தேன். நெருக்கடியை முன்னறிவித்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் மோடி அரசாங்கத்தின் ஆயத்தமின்மை மற்றும் ஒத்துழைப்பின்மை பற்றி அப்போது அறிந்துகொள்ள முடிந்தது.

அவர்களை சந்தித்த பின்னர் பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். நமது முதலமைச்சர்கள் பிரதமரிடம் பேசி நிவாரணம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அவ்வப்போது கடிதம் எழுதியுள்ளனர். அவர்களில் சிலரிடம் குறைந்த அளவு தடுப்பூசி மட்டுமே மிச்சம் உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர்கள் இல்லை.

ஆனால் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து கனத்த மௌனம் தான் பதிலாகக் கிடைத்தது. மாறாக, வேறு சில மாநிலங்களுக்கு சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளைக் கேட்பதற்கு பதிலாக, அந்த ஆலோசனைகளை வழங்கும் எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாக்கும் பணியில் மத்திய அமைச்சர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த “நீயா நானா” போட்டி குழந்தைத்தனமானது, முற்றிலும் தேவையற்றது.

பலமாத மறுப்புக்குப் பின்னர், மத்திய அரசு இப்போதுதான் வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. செய்யாமல் விடுவதை விட தாமதமாகச் செய்வது மேல்.

இந்தியா ஏற்கனவே கிட்டத்தட்ட 6.5 கோடி கோவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. நம்முடைய நாடு உலகிலேயே மிக அதிகமான தொற்று விகிதத்தைக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி, நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டாமா? மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் அனுப்பி, நமது தாராள மனப்பான்மையைப் பற்றி பெருமை பேசிக்கொண்டிருப்பது நம்முடைய நாட்டில் இறந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எந்த வகையில் உதவப்போகிறது?

ஆஸ்துமா, ஆஞ்சினா, நீரிழிவு, சிறுநீரக மற்றும் கல்லீரல் நோய்கள் மற்றும் பிற நோய்கள் போன்ற ஆபத்தான சுகாதார கோளாறுகள் இளைஞர்களுக்கும் இருப்பதால் நோய்த்தடுப்பு வயதை 25 மற்றும் அதற்கும் மேல் என்று குறைப்பதன் மூலம் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

எங்கள் முதலமைச்சர்களுடனான எனது பேச்சுவார்த்தையின் போது, ஜிஎஸ்டி பற்றிய கேள்வி எழுந்தது. பூர்வாங்க நடவடிக்கையாக, கோவிட்-19 நோயைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் தேவையான அனைத்து உபகரணங்கள், கருவிகள், மருந்துகள் ஆகியவற்றை ஜிஎஸ்டியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் போன்ற அனைத்தும் 12% ஜிஎஸ்டிக்கு உட்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

ஆக்ஸிமீட்டர்கள் போன்ற அடிப்படை உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற உயிர்காக்கும் முக்கியமான உபகரணங்கள் கூட 20% ஜிஎஸ்டிக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போதைய நிலையில், இது ஒரு மனிதாபிமானமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத செயல். பகுதிநேர ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடுகள், தடை உத்தரவு மற்றும் முழு முடக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் எத்தனிக்கும் இந்த சூழலில், இந்த முடிவு நம்முடைய பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் தினசரி கூலிகளைத் தாக்கும்.

ஆகையால், தகுதியான ஒவ்வொரு குடிமகனின் கணக்கிலும் மாத வருமான ஆதாரமாக ரூ. 6,000 செலுத்துவது கட்டாயமாகும். இதேபோல், ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு தொடங்கியுள்ள நிலையில், அவர்கள் வேலை செய்யும் மாநிலங்கள் மற்றும் சொந்த மாநிலங்களில் அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு உதவிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.

எங்கள் கட்சி முன்வைக்கும் பரிந்துரைகள் உண்மையான ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த சவாலான காலங்களை அரசியல் போட்டியாளர்களாக அல்லாமல் இநபுலம்பெயர் எதிர்கொள்வதே உண்மையான ராஜதர்மமாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article