புதுடெல்லி:
கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்த சூழலில் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்காள சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் வரும் ஏப்ரல் 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது

இந்நிலையில் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் எனது பொது பேரணிகளை நிறுத்தி வைக்கிறேன்.

தற்போதைய சூழ்நிலையில் பெரிய பொது பேரணிகளை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆழமாக சிந்திக்க அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.