மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்த சோனியா காந்தி

Must read

டெல்லி: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு நோ கமெண்ட்ஸ் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறி இருக்கிறார்.

அதோ, இதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கும் மகாராஷ்டிர அரசியல் பரபரப்பு இன்னும் தீர்ந்தபாடில்லை. தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கிறது.

பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு சிவசேனா விலகி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. பாஜக, சிவசேனா ஒரு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

அதேபோல நாங்களும், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தோம். அவர்கள் அவர்களது அரசியலை செய்கின்றனர். நாங்கள் எங்களின் அரசியல் செய்கின்றோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்து சிவசேனாவுடன் கூட்டணி இல்லையோ என்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதவேளையில் பிரதமர் மோடியை சரத்பவார் சந்தித்து பேச, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்று  பேச்சுகள் கிளம்பின.

இந் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம், செய்தியாளர்கள் மகாராஷ்டிர அரசியல் நிலவரம் பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால், இக்கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மாறாக, எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை (நோ கமெண்ட்ஸ்) என்று கூறி விட்டு சென்று விட்டார். ஆனால் அதே நேரத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்து விட்டார் என்று தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

More articles

Latest article