டில்லி
மார்ச் 26 ஆம் தேதி அன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பொது செயலர் மற்றும் மாநில பொறுப்பாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சியிடம் பறி கொடுத்துள்ளது. இதையொட்டி திருத்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோன்யாகாந்திக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
இதையொட்டி அவர் பவ்வேறு தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களை மார்ச் 26 ஆம் தேதி சோனியா காந்தி சந்திக்க உள்ளார். காங்கிரஸ் தலைமையகத்தில் ந்டைபெறும் இக்கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
மார்ச் 26 நடைபெறும் இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறும் அமைப்புத் தேர்தல்கள், உறுப்பினர் சேர்க்கை, காங்கிரஸ் இயக்கம், போராட்டங்கள், விளக்கப்படங்கள் உருவாக்குவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.