ராஜ்கோட்

குஜராத்தில் உடல்நலம் குன்றிய தாயை அவர் மகனே மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் நகரில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீபென் (வயது 64).    தனது மகன் சந்தீப்புடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.   சந்தீப் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.    கடந்த செப்டம்பர் மாதம் ஜெயஸ்ரீ மாடியில் இருந்து கீழே விழுந்ததால் மரணம் அடைந்தார்.    நோயின் கொடுமை தாங்காமல் இவர் தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிந்திருந்தனர்.

காவல்துறையினருக்கு கையெழுத்தின்றி ஒரு கடிதம் வந்துள்ளது.  அதில் இந்த சம்பவம் ஒரு கொலை எனவும் சந்தீப் தன் தாயக் கொன்றுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டது.    இதை ஒட்டி காவல்துறையினர் பலரிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.   அதன் பின் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காமிரா பதிவை காவல் துறையினர் ஆராய்ந்தனர்.

அந்தப் பதிவில் காணப்படுவதாவது :

’சந்தீப் தனது தாய் ஜெயஸ்ரீயை கைத்தாங்கலாக மாடிப்படியில் ஏற்றிப் பார்த்து முடியாததால் லிஃப்ட் மூலம் மாடிக்கு அழைத்து செல்கிறார்.   சிறிது நேரம் கழித்து சந்தீப் மட்டும் தனியாக வந்து தனது வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொள்கிறார்.    அதன் பின் ஒருவர் மாடிப்படியில்  ஏறி வந்து சந்தீப்பின் வீட்டு கதவை தட்டி அவர் தாயார் கீழே விழுந்ததாக சொல்கிறார்   சந்தீப் அவருடன் கீழே ஓடுகிறார்.’

இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது காற்றாட அமர்வதற்காக தனது தாயை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றதாக கூறி உள்ளார்.   ஆனால் அதை நம்பாத போலிசார்,  மாடிப்படி ஏற முடியாத மூதாட்டி எவ்வாறு மதில் சுவர் ஏறி குதித்துள்ளார் என்பது போன்ற கேள்விகள் எழுப்பவே அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

அதையொட்டி சந்தீப் தன் தாயைக் கொலை செய்ததை கண்டுபிடித்துள்ள காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.