டெல்லி: சிறிய தவறுக்கு பணி நீக்கமா? அறியாமல் செய்த சிறிய தவறுக்காக ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளது ஏற்புடையதல்ல, இதை தேசிய பிரச்சினையாக்குவதா என சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் திமீராக டிவிட் போட்டுள்ளார். இது தமிழக மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் ஆன்லைன் மூலம் சோமேட்டோ உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்தபடி உணவு வராததால், அதற்கான பணத்தை திருப்பி அளிக்கக்கோரி, கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு பதில் அளித்தவர், உங்கள் வட்டார மொழி தடையாக இருப்பதாகவும் தேசிய மொழியான இந்தி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை செய்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த விகாஸ், இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளத்தில் #RejectZomato எனும் ஹேஸ்டேக்குடன் வைரலானது. சோமேட்டோ நிறுவனத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சோமேட்டோ நிறுவன அதிகாரி, தனது நிறுவன ஊழியரின் தவறுக்கு மன்னிப்பு கோரி விளக்கம் அளித்ததுடன், அவரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில், சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், தனது நிறுவன ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது, அவர் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார் என்று கூறி திமிராக டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டில், உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள ஒருவர் அறியாமல் செய்த தவறு தேசிய பிரச்சனையாக மாறி இருப்பதாகவும், நாட்டின் சகிப்புத்தன்மை என்பது தற்போது இருப்பதைவிட அதிகரிக்க வேண்டும். இதில் யாரை குறை கூறுவது? எனவும் கேட்டுள்ளார்.
அடுத்த டிவிட்டில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பணியாளரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம். இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியில் இருந்து நீக்குவது ஏற்புடையது அல்ல, ஆனால் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறி செல்ல அவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது தான் அவர்களின் தொடக்கத்தில் இருந்து வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.
எனவே பிராந்திய மக்களின் உணர்வுகளையும் மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் யாரும் நிபுணர்கள் அல்ல, நானும் கூட என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் குறைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். பிராந்திய உணர்வுகளுக்கும் மற்றவர்களுடைய மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்.
தமிழகத்தை நாங்கள் நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளைப் போல உங்களையும் நாங்கள் நேசிக்கிறோம். கூடுதலாகவோ, குறைவாகவோ அல்ல வேற்றுமையில் ஒற்றுமை என இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் திமீர் பேச்சு தமிழக மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
#regectzomato: சொமேட்டோ விளக்கம் – அனிருத் தனது அம்பாசடர் பதவியை ராஜினாமா செய்வாரா?