கிரிக்கெட் விளையாட்டை சிறுவயது முதல் பார்த்துப் பரவசம் அடைந்து வரும் பலர் அதில் உள்ள பல்வேறு வித்தியாசமான விதிகளை அறிந்திருப்பார்களா என்றால் சந்தேகமே.

அப்படி வித்தியாசமான சில முக்கிய கிரிக்கெட் விதிகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம் :

1. நிழல் விதி

பிட்ச்சில் நிழல் விழும்படி நிற்கும் பீல்டர், பந்துவீச்சாளர் வீசிய பந்து பேட்ஸ்மேனை அடையும் வரை அந்த பீல்டரின் நிழல் பிட்சை விட்டு அகலக்கூடாது, அதாவது அதுவரை பீல்டர் அதே நிலையில் இருக்க வேண்டும்.

2. இருமுறை பந்தை அடிப்பது

பேட்ஸ்மேன் எந்தக் காரணம் கொண்டும் பந்துவீச்சாளர் வீசிய பந்தை இரண்டாவது முறை தனது மட்டையாலோ அல்லது மட்டையை வைத்திருக்கும் கையினாலோ தொடக்கூடாது, ஒருமுறை அடிக்கப்பட்ட பந்தை பீல்டர் தான் எடுக்க வேண்டும் என்பது விதி.

விதியை மீறும் பட்சத்தில் பந்துவீசும் அணி ஆட்சேபம் தெரிவித்தால் அந்த பேட்ஸ்மேன் அவுட் ஆனதாகக் கருதப்படும்.

3. பந்தை தொப்பி மற்றும் துணியால் தடுத்து பிடிக்கக்கூடாது

பீல்டிங் செய்யும் போது பேட்ஸ்மேன் அடித்த பந்து பீல்டர் அணிந்திருக்கும் தொப்பியிலோ அல்லது ஆடையிலோ, அல்லது கைக்குட்டை போன்ற பிற பொருட்களில் தடைபட்டு பிடித்தால் அது கேட்ச்சாக கருதப்பட மாட்டாது.

வேறு பீல்டரின் தொப்பி உள்ளிட்ட பொருட்களில் பட்டு வரும் பந்தைப் பிடித்தாலும் அவுட் வழங்கப்படமாட்டாது.

டாஸ் போடும் ஹான்சி கிரோனே மற்றும் நாசர் ஹுசைன்

4. தோல்வியுற்றதாக ஒப்புக்கொள்வது

ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா-வில் முடிவது போல் இருக்குமானால், புள்ளிகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு அணிக்கு சாதகமாக இருக்கும் என்று இரு தரப்பு கேப்டன்களும் ஒரு சேர முடிவெடுத்து ஏதாவது ஒரு அணி தோல்வியுற்றதாக ஒப்புக்கொள்ளலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க இது உதவியாக இருக்கும், இதற்கு முன் ஒரே ஒரு முறை 2000 மாம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க கேப்டன் ஹான்சி கிரோனே இந்த முடிவை எடுத்தது மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

5. எல்.பி.டபுள்யூ

ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்து பேட்ஸ்மேனின் காலில் பட்டால் எல்.பி.டபுள்யூ அதாவது லெக் பிஃபோர் தி விக்கெட் என்று அவுட் வழங்கப்படுகிறது.

எல்.பி.டபுள்யூ என்பதில் லெக் என்று குறிப்பிடப்படுவதால், காலில் பட்டால் மட்டுமே அவுட் என்று அர்த்தமல்ல, ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்து உடம்பின் எந்தப் பகுதியில் பட்டாலும் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் வழங்கப்படும், இதற்கு உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் அவுட்டானதைச் சொல்லலாம்.